திருப்பதி ஏழுமலையான் கோலில் அக்டோபர் 4-ம் தேதி முதல் பிரமோற்சவ விழா தொடங்குகிறது. அக்டோபர் 8-ம் தேதி கருடசேவை விழாவுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருப்பதியில் 2 மலைப்பாதைகளிலும் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் திருப்பதி ஏழுமலையான் மலையப்ப சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். இந்த பிரம்மோற்சவ விழாவில் முக்கியமான விழாவான கருட சேவை அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது. கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிர ஆலோசனை நடத்தியது.
திருப்பதியில் கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுகிறது. பக்தர்களுக்காக பிரத்யேக வாசல்களும் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமலை திருப்பதி கோவில் கருட சேவையையொட்டி 7-ந் தேதி இரவு 9 மணி முதல் 9-ந் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி செப்டம்பர் 18-ம் தேதி இரவு கருட சேவை நடந்தது. செப்டம்பர் 18-ம் தேதி மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 78,690 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 86 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் டோக்கன் பெற வேண்டும். அதற்காக, திருப்பதி ரெயில் நிலையம் எதிரில் விஷ்ணுநிவாஸ், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினசரி அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு டோக்கன் பெற்றால், டோக்கன் வாயிலாக அன்றோ அல்லது அடுத்த நாளோ குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி தரிசனம் செய்ய காலை 6 மணிக்கு தினசரி, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன
திருப்பதி ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள வசதியாக தரிசன டிக்கெட்டுகளை ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான இணையதள முன்பதிவு செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கியது.
இதற்காக, செப்டம்பர் 18-ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை ஏழுமலையானின் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் செய்வதற்கான ஆன்லைன் பதிவு நாளை காலை 10 மணி வரை செய்யலாம். பின்னர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாளை முதல் 22-ம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் செப்டம்பர் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதேபோல், டிசம்பர் 21ம் தேதி மாலை 3 மணிக்கு விர்ச்சுவல் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு செப். 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீ வாரி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் ஆன்லைன் ஒதுக்கீடு செப்டம்பர் 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக டிசம்பர் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீட்டை செப்டம்பர் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செப். 24ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
திருமலை மற்றும் திருப்பதிக்கான டிசம்பர் மாத அறை ஒதுக்கீடு செப்டம்பர் 24-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி சேவா கோட்டா செப்டம்பர் 27-ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.