Chennai- Tirupati Tirumala News: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்த கேள்விக்கு தேவசம் போர்டு தலைவர் சுப்பாரெட்டி பதில் அளித்தார். வர இருக்கிற வைகுண்ட ஏகாதசி நிகழ்வு பக்தர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.
Advertisment
வைகுண்ட ஏகாதசி, வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை டிசம்பர் மாதம் நிகழும். ஆனால் 2019-ம் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி இல்லை. அதற்கு பதிலாக 2020-ம் ஆண்டு ஜனவரி 6, டிசம்பர் 26 என இரு முறை வைகுண்ட ஏகாதசி வருகிறது. எனவே ஜனவரி 6 வைகுண்ட ஏகாதசி அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Tirupati Tirumala TTD Online Booking: ஆன் லைன் டிக்கெட்
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி, ரொம்பவும் விசேஷம். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிக பிரபலம். அதேபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும், அதற்கு மறுநாளும் நடைபெறும் ‘வைகுண்ட துவாரம்’ எனப்படும் சொர்க்க வாசல் நிகழ்வில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசிப்பார்கள்.
வழக்கமாக திருப்பதியில் ஆன் லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். வைகுண்ட துவாரம் நிகழ்வையொட்டி ஆன் லைன் டிக்கெட் விற்பனை கிடையாது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் தங்குவதற்கான வசதிகள் கிடைப்பதும் சிரமம்.
இதற்கிடையே இந்த ஆண்டு 10 நாட்கள் வரை வைகுண்ட துவாரம் நிகழ்வை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இது குறித்து தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இது தொடர்பாக திருமலை கோவில் அர்ச்சகர்கள், ஆகம விற்பன்னர்கள் ஆலோசித்து பரிந்துரை செய்வார்கள்’ என குறிப்பிட்டார்.