திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கோடை விடுமுறையில் பக்தர்கள் அதிக அளவில் வருவதை எதிர்பார்த்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களுக்கு சிரமமில்லாமல் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
திருமலை காடு சாலைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் வருகிறது. இங்கு இரவில் வன விலங்குகள் பாதைகளை கடப்பதால், வன விதிகளின்படி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நேரக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
இருப்பினும், அதிக நெரிசல் மற்றும் விசேஷ நாட்களில், திருமலையில் பக்தர்கள் நெரிசலைத் தவிர்க்க, காட் ரோடு 24 மணிநேரமும் திறந்திருக்கும், என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கூறினார்.
மேலும், பொது பக்தர்களின் வசதிக்காக, பரிந்துரை கடிதத்தின் பேரில் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
கோடை கால நெரிசலைக் கருத்தில் கொண்டு, தற்போது விஐபி பிரேக் சிஸ்டத்தை நீக்கிவிட்டு, திருப்பதியில் SSD (இலவச தரிசனம்) டோக்கன்களை 30,000 ஆக உயர்த்தியுள்ளோம். அடுத்த கோடை விடுமுறையின் போது, சாதரண பக்தர்களுக்கு அதிக தரிசன நேரங்களை வழங்குவதே எங்கள் முன்னுரிமை, என்று அவர் கூறினார்.
வரிசைகளிலும் கம்பார்ட்மென்டிலும் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம், மோர் மற்றும் மருத்துவ வசதிகள் இடைவிடாது வழங்கப்படுகின்றன. மாட வீதிகள் மற்றும் நாராயணகிரி தோட்டங்கள் முழுவதும் கூல் பெயிண்டிங் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோடை காலத்தில் சேஷாசலம் வனப் பகுதிகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகளைத் தவிர்க்க வனத் துறை மற்றும் அரசாங்க தீயணைப்புத் துறையுடன், தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருப்பதியில் சனிக்கிழமை (ஏப்.7) 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“