Tirumala Tirupati Devasthanam To Ban Packaged Water At Tirupati Temple: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இது இருக்கும். பக்தர்கள், ‘ஜல பிரசாதத்தை’ தங்கள் பயன்பாட்டுக்கு பெற ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் இது அமலாக இருக்கிறது.
இந்தியாவில் பக்தர்கள் அதிகம் குவியும் தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் இருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பக்தர்களுக்கு தூய்மையான தண்ணீரை ஜல பிரசாதமாக வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் 92 இடங்களில் ஆர்.ஓ பிளான்ட்களை வைத்திருக்கிறது. இவற்றின் மூலமாக 24 மணி நேரமும் பக்தர்களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது.
எனினும் பாட்டில் தண்ணீரை பக்தர்கள் குடிக்க பயன்படுத்துவதும் நிற்கவில்லை. அனைத்து பிராண்ட்களின் குடிநீர் பாட்டில்களும் திருமலையில் கிடைக்கின்றன. அதாவது வருகிற பக்தர்களில் சரிபாதி பேர் பாட்டில் தண்ணீரை பயன்படுத்துவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் 6000 முதல் 8000 வரையிலான பெட்டிகளில் வாட்டர் பாட்டில்கள் திருமலைக்கு வருகின்றன. கடைகளில் 500 பெட்டிகளுக்கு மேல் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே சில முறை பாட்டில் தண்ணீரை தடை செய்ய முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. இந்த முறை அதை அமல்படுத்த தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி மும்முரமாக இருக்கிறார்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பக்தர்களை கஷ்டப்படுத்தும் விதமாக அதிரடியாக தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை. முதலில் ஜல பிரசாதமாக வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். பாட்டில் தண்ணீர் கொண்டு வரும் பக்தர்களைக் கூட அந்தத் தண்ணீர் தீர்ந்ததும், மீண்டும் பாட்டில் தண்ணீர் வாங்காமல் காலி பாட்டிலில் ஜல பிரசாதம் பெற ஊக்கப்படுத்துவோம். இப்படி படிப்படியாக பாட்டில் தண்ணீருக்கு தடை ஏற்படுத்துவதே நோக்கம்’ என்கிறார் அவர்.
தண்ணீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டால், ஏழுமலையான் கோவிலையொட்டி சுற்றுச்சூழலும் பெரிதும் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.