திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் கருட சேவையை முன்னிட்டு இரண்டு மலைப் பாதைகளிலும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4 ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவார்கள் என்பதால், திருப்பதி தேவஸ்தானம் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
கருடசேவை நிகழ்வுக்கு, ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாகும். எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்புக்காக வழக்கமான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.
அந்தவகையில், கருட சேவையை முன்னிட்டு அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 9 மணி முதல், 9 ஆம் தேதி காலை 6 மணி வரை திருப்பதி கோவிலுக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்கூட்டியே பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்தெந்த பகுதியில் நிறுத்தலாம் என்பது குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி அலிபிரி பாரத வித்யா பவன், நேரு மாநகராட்சி பள்ளி மைதானம், விநாயகா நகர் குடியிருப்பு, எஸ்.வி வைத்திய கல்லூரி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம். சுற்றுலா பேருந்துகளை, உயிரியில் பூங்கா சாலையில் உள்ள தேவ லோக் மைதானத்திலும், பைக்குகளை பாலாஜி இணைப்பு பேருந்து நிலையத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்கள் தங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை அறிந்துக் கொள்வதற்காக க்யூ.ஆர் கோடு பொருத்தப்பட்ட அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரூயா, கருடா, கூடலி, பாலாஜி இணைப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் க்யூ.ஆர் குறியீடு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் அவற்றை சென்றடையும் வழிகள் பற்றிய விவரங்கள் உள்ளது. எனவே, பக்தர்கள் க்யூ.ஆர் குறியீட்டை பயன்படுத்தி வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“