திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. இதனால் 3 நாட்களுக்கு கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்னதாக, 14 ஆம் தேதி மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம் நடக்கிறது. முதல் நாள் பவித்ர பிரதிஷ்டை, 2-வது நாள் பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 3-வது நாள் பவித்ர பூர்ணாஹுதி நடக்கிறது. 3 நாட்களுக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
ஆண்டு முழுவதும் சமயப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளால் தோஷங்கள் ஏற்படுகின்றன. தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. பவித்ரோற்சவம் நடைபெறும் 3 நாட்களும் மாலையில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இந்தப் பவித்ரோற்சவம் காரணமாக, கோவிலில் 14 ஆம் தேதி சஹஸ்ர தீபலங்கார சேவை, 15 ஆம் தேதி திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களிலும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தொண்டமான்புரம் கோவிலில் 16 ஆம் தேதி மாலை அங்குரார்ப்பணமும், 17 ஆம் தேதியில் இருந்து 19 ஆம் தேதிவரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவமும் நடக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“