Advertisment

திருப்பதியில் புதன்கிழமை கைசிக துவாதசி விழா; ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு வீதி உலா

திருப்பதியில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சிறப்பு வீதி உலாவான கைசிக துவாதசி விழா புதன்கிழமை நடைபெறுகிறது; தேவஸ்தானம் ஏற்பாடு

author-image
WebDesk
New Update
tirupathi

திருப்பதி திருமலையில் உக்ர சீனிவாசமூர்த்தி வீதி உலாவான கைசிக துவாதசி விழா புதன்கிழமை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisment

மகாவிஷ்ணு ஆசாட மாதம் சுக்ல ஏகாதசி அன்று சயன கோலத்துக்குச் செல்வார். அப்போது சயன கோலத்துக்குச் சென்றவர், கைசிக துவாதசி அன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை, அதாவது தூக்கத்தில் இருந்து எழுவதை வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கைசிக துவாதசி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா திருப்பதி தேவஸ்தானத்தால் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கைசிக துவாதசி ஆஸ்தான விழா நாளை மறுநாள் (13.11.2024) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 

வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் அழைக்கப்படும் உக்ர சீனிவாசமூர்த்தி கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன் வலம் வருவார். 14-ம் நுாற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர் சீனிவாசமூர்த்தியே. சூரிய ஒளி மேனியில் பட்டால் உக்ரம் அடைவார் என்பதால், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசியன்று மட்டுமே, உக்ர சீனிவாசமூர்த்தி (உற்சவர்) கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகிறார்.

அந்தவகையில் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை வீதியுலா நிகழ்வு நடைபெறும். அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெறும்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மற்ற திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளின் போது, மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment