திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் நாளை (ஜூன் 18) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடி இலவச தரிசனம் தவிர, ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதியும் உள்ளது. இலவச தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க விரும்பாத பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் விரைவு தரிசனம் பெறுவார்கள். இருப்பினும் இந்த ஆன்லைன் முன்பதிவுக்கும் கடும்போட்டி உள்ளது. ஏனெனில் ஆகஸ்ட் மாதம் வரையிலான தரிசன டிக்கெட்டுகள், சேவைகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள், உற்சவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முன்பதிவு செய்ய நாளை ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் எத்தனை மணிக்கு ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்கிற விவரத்தை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோர் ஜூன் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்கு முன்பு பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.
இதேபோல் செப்டம்பர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இந்த சேவைகளுக்கு பக்தர்கள் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் காணொலி வாயிலான சேவைகளுக்கான டிக்கெட் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் செப்டம்பர் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.
ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருமலை திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“