ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை கலந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், "ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டுகூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆனால், சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. அரசியல் ஆதாயத்திற்காக இந்த குற்றம் சுமத்தப்படுகிறது என்றும் கூறியது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில், "சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது.
எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறவோ மாட்டார்கள். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா? " என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.
ஆய்வில் உறுதி
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வக அறிக்கை உறுதி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கால்நடை தீவனம் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் (NDDB CALF) அறிக்கையின் படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இப்படியான அறிக்கை வெளியாகி இருப்பது திருப்பதி கோவில் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.