உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி, திருமலை மலையில் செயல்படும் தனியார் உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவஸ்தானம். இனிமேல் இந்த உணவகங்களில் இந்திய உணவு வகைகளை மட்டுமே பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இந்திய பாரம்பரிய உடைகளை, குறிப்பாக தெலுங்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருமலை மலையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட தரமான உணவுகளை வழங்கி வருகிறது. அதேபோன்று, திருமலை மலையில் செயல்படும் ஹோட்டல் நிர்வாகத்தினரும் உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.
குறிப்பாக, நமது பாரம்பரியத்தை உணர்த்தும் இந்திய உணவு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும், பக்தர்களுக்கு உணவு பரிமாறும் ஊழியர்கள் இந்திய பாரம்பரிய உடைகளையும், குறிப்பாக தெலுங்கு சம்பிரதாய உடைகளையும் அணிவது அவசியம்.
அப்போது பேசிய கூடுதல் நிர்வாக அதிகாரி, திருமலை மலையில் ஹோட்டல் நடத்துவதற்கான உரிமம், ஜிஎஸ்டி சான்றிதழ் மற்றும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் ஆகியவற்றை பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் எளிதில் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது குறைகளை கூடுதல் நிர்வாக அதிகாரியிடம் எடுத்துரைத்தனர். அதற்கு பதிலளித்த வெங்கையா சவுத்ரி, அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.