திருப்பதியில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். அதேநேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்களும் வெளியிடப்பட்ட சீக்கிரமே முடிவடைந்து விடும். இதனால் தேவஸ்தானம் எந்த தேதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்பதை முன்னதாகவே அறிவிக்கும்.
அந்தவகையில், நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட் தவிர தங்குமிடம் மற்றும் தன்னார்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டையும் வெளியிட உள்ளது. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் கூறியிருப்பதாவது; “வரும் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்யலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சேவைகளில் கலந்துகொள்ளலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கும், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும். இதேபோல் திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே (ttdevasthanams.ap.gov.in) முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.” இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.