/indian-express-tamil/media/media_files/rkWS71E0VjYQ9EorUIyH.jpeg)
Tiruvarur
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த கூட்டத்தில் பேசிய கோட்டூர் ஒன்றிய விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ’விக்கிரபாண்டியம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஆண்டு இறுதித் தேர்வு வரும்பொழுது மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக என்னுடைய பங்களிப்பில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவினை மாலை நேரத்தில் வழங்கி வந்துள்ளேன். இதனால் அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து நிறைய மாணவர்கள் நன்றாக தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
அதுபோலவே என்னுடைய காரியமங்கலம் ஊரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளிக்கும் ஓராண்டுக்கு தேவையான சத்துணவு காய்கறிகளை ஒவ்வொரு நாளும் தேவையான அளவுக்கு நான் தர விரும்புகிறேன். அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும், என்றார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர், அனுமதி வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
விவசாயியின் இந்த முயற்சிக்கு ஆட்சியரும், மற்ற விவசாயிகளும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
முன்னதாக, காவிரி நீர் பிரச்சினையால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சம்பா நெல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்க தொகை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.