Advertisment

”ஜாக் நீ இப்போதும் இருக்கிறாய்... என்னில்!” காதலர் தின கட்டுரை

”ஜாக், எனக்குத்தெரியும்..சில கனவுகள் கடலில் மூழ்கிப்போகக்கூடியவை அல்ல. அவை ஆயுள் காலம் முழுவதும் நம் கூடவே வரும். நமது வாழ்வின் கடைசி நாளில், கடைசி கணத்தில் கண்களை மூடும் போதும் கண்களின் உள்ளே தோன்றும் அந்த கனவு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

”ஜாக், எனக்குத்தெரியும்..சில கனவுகள்  கடலில் மூழ்கிப்போகக்கூடியவை அல்ல. அவை ஆயுள் காலம் முழுவதும்  நம் கூடவே வரும்.  நமது வாழ்வின் கடைசி நாளில், கடைசி கணத்தில் கண்களை மூடும் போதும் கண்களின் உள்ளே  தோன்றும் அந்த கனவு. 

Advertisment

ஆமாம் ஜாக், நீ என் கனவு, என் காதல் நீ... நான்  தான் நீ. அதனால்தான் நீ  என்னில் இப்போதும் இருக்கிறாய்..  என் கண்களின் உள்ளே கடலில்... காதல் என்றால் என்னவென்று என்னை ஒவ்வொரு நொடியும் நினைவு படுத்துகிறாய்.. எத்தனையோ ஆண்டுகளாக நீ காதலை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறாய்.  சரியாகச்சொல்ல வேண்டும் என்றால்  1912.ம் ஆண்டு  ஏப்ரல் 10 .ம்தேதிமுதல் இங்கிலாந்தில் ஸ்தாப்டனில் இருந்து நியூயார்க் வரையுள்ள அந்த கடல் பயணம் நம் இரண்டு பேரின் வாழ்க்கையை மாற்றி எழுதியது.  சொல்லப்போனால் அந்த பயணம் நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்ல ;அந்த பயணத்தில் நம்முடன் பயணம் செய்த 2221 பேரின் வாழ்க்கையையும் பகை கொண்டு கடல் இரண்டாகப்பிரித்தது.  அவர்களில் 1517 பேர் இறந்தார்கள். மீதியுள்ளோர் தப்பித்தார்கள்.

 டைட்டானிக் மூழ்கி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் இப்போது அந்த புத்தம் புதுக்கப்பலின் பெயிண்டின் வாசம் என் நாசியில் மணக்கிறது. கப்பலின் ஆரம்ப கால காட்சிகளை நினைத்துப்பார்க்கிறேன். டைனிங் ஹாலில்  சாப்பாட்டு மேஜைகளில் யாருடைய விரல் ரேகைகளும் பதியாத  பிளேட்டுகளையும், படுக்கை அறைகளில் இதுவரை யாருமே படுத்துறங்காத படுக்கை விரிப்புகளும் என் மனக்கண் முன் தோன்றி மறைகிறது.

 அன்று கப்பலின் முதல் பயணம்.  முதல் பயணம் செய்பவர்கள் கூட்டத்தில்  நீயும் நானும். கனவுக்கப்பல் என டைட்டானிக் அழைக்கப்பட்டது. உனக்கும் எனக்குமான கனவுக்கப்பல் அது என்பதே சரி. ஜாக் நீ அழகாக இருந்தாய். உனது ஹேர் ஸ்டைல் என்னைக்கட்டிப்போட்டது. உன் பார்வையின் கனிவு என்னை மிகவும் கவந்தது.  அழகாக ஓவியம் வரைந்தாய். நீ என்னைப்பார்த்து வரைந்த ஓவியத்தையும் அந்த ஓவியத்தின் கீழே 1912 ஏப்ரல் 14  ஜேடி என்ற நீ கையெழுத்திட்டதையும் நான் மறக்கவே மாட்டேன். விரல்கள் மூலமாக காதலை மீட்டுபவனாக நீ இருந்தாய். கப்பல் தளத்தில் நின்று இரு கைகளையும் காற்றில் வீசியபடி நின்று “நான் தான் இந்த உலகின் ராஜா  என்ற பாவனையில் பெரிய மனிதன் போல் நீ தெரிந்தாய். அப்படிப்பட்ட ஒருவர் அல்லவா, இந்த ரோஸின் காதல் ராஜ்யத்தின் ராஜாவா வர முடியும்? அதுதான் நடந்தது. 

 நாம் காதலிக்கத்துவங்கினோம்;  நான்கு பகலும் நான்கு இரவும் முடியும்போது  பிரிய வேண்டியவர்கள்.  உன்னிடம்  பணம் எதுவுமே இல்லை.. ஒரு லாட்டரி மூலமாக உனக்கு இந்த கப்பல் பயணத்துக்கு டிக்கெட் கிடைத்தது. கனவில் கூட நினைத்துப்பார்த்திராத ஒரு யாத்திரையாக அந்த கப்பல் பயணம் உனக்கு இருந்தது.  எனக்கோ? அந்த கோடீஸ்வரனின்  மனைவியாக வாழ்நாள் முழுவதும் அடிமையாக வாழ வேண்டிய யாத்திரையாக அது இருந்தது.  இருந்தும் நாம் சந்தித்தோம். அந்த நபருடன் உள்ள வாழ்க்கை தேவை இல்லை என்று கருதி கடலில் குதிக்க முயன்ற என்னை வாழ்க்கைப்பயணத்தைத்தொடர்வதற்காக மீட்டு வந்தாய். அத்துடன் நமது பயணம் ஒன்றானது.  கப்பல் தளத்தில் இருவரும் சேர்ந்து கைகளை சேர்த்தபடி மகிழ்ச்சிப்பிரவாகத்தில் நின்றிருந்ததும், கடலில் துள்ளியோடும் டால்பின்களை ரசித்ததும் நினைவலைகளில் மோதுகிறது.

நம்மை துரத்தினார்கள்.. ஓடினோம்...ஓடினோம். அங்கிருந்த ரோல்ஸ்ராய் காருக்குள் நுழைந்தோம்.  நான் நட்சத்திரங்களுக்குப்போகணும் என்றேன்.  அதுக்குப்பின்னாடி நான் வரணும் என்றாய் நீ..நாம் ஒன்றானோம். நாம் ஒன்றிணைந்தோம். இருவர் ஒருவரானோம். வெளியே நம்மை தேடுவதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.

 கப்பலின் முதல் யாத்திரையில் அது பனிப்பாறையில் மோதும்போது நாம் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருந்தோம். இடி விழுந்தது போல் நமது உதடுகள் இடறி பிரிந்தது.  பிறகு எல்லாமே வேகமாக நடந்தன.ஜாக், உன்னைப்பற்றிய நினைவுகள் வரும்போது நான் அன்றைய பதினேழு வயது பருவப்பெண்ணாக மாறி விடுகிறேன்.  என் முகச்சுருக்கங்களும், நரை முடிகளும் உன்னை நினைக்கும்போது மறைந்து விடுகிறது.

 மூழ்கவே மூழ்காது என வடிவமைக்கப்பட்ட கனவுக்கப்பல் டைட்டானிக். மிகவும் விலையுயர்ந்த பர்னிச்சர்கள் கொண்டு கதவுகள், ஜன்னல்கள், உள்பகுதியில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. படிகளின் அழகே தனிதான். டைட்டானிக்கின் இரண்டாம் வகுப்பு, முன்றாம் வகுப்பு தளங்கள், ஏனைய பிரமாண்டமான கப்பல்களின் முதல் வகுப்பில் கூட காண முடியாது. அவ்வளவு அழகாக, மெச்சும்படியாக, கண்ணைக்கவரும் விதத்தில் கப்பலின் அனைத்து பகுதிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தது.மூன்று தளங்களில் கடல் நீர் புகுந்தாலும் கப்பல் மூழ்காது என்றே வடிவமைப்பாளர் சொன்னார். இருந்தாலும் நீர் எல்லா இடத்திலும் புகுந்து கப்பலை இரண்டாக உடைத்து ஆழக்கடலுக்கு இழுத்துச்சென்றது. 

 சுற்றிலும் மரண ஓலம். நான் ஏதோ கப்பலின் பலகையைப்பிடித்துகொண்டு மிதந்துகொண்டிருந்தேன். என் கைகளை நீ பிடித்திருந்தாய்..நீரின் குளிரால் மூச்சு விடவே சிரமாக இருந்தது.  செத்திடுவேனோன்னு எனக்கு பயமா இருந்துச்சு. நீ ஒண்ணும் ஆகாதுன்னு சொன்னாய்..”ஐ லவ் யூ என்றேன் நான். 

 அதற்கு நீ,”உன்கிட்டே என்னை கொண்டு வந்து சேர்த்த டைட்டானிக்குத்தான் நன்றி சொல்லணும். நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ... நீ இங்கே சாகப்போகிறது இல்லை. உன்னிடமிருந்து ஒரு சத்தியம் மட்டும் வேண்டும்.   இப்ப உள்ள இக்கட்டுலேர்ந்து நீ தப்பிடுவாய். கல்யாணம் பண்ணிக்கணும்.. நிறைய குழந்தைகளுக்கு அம்மா ஆவாய்.  நிறைய பிள்ளைங்க பெத்து சாவாய்....ஒரு  ஆயுள் முழுக்க வாழ்ந்து தான் நீ இந்த உலகிலிருந்து விடை பெறுவாய்  வாழ்க்கையில் எப்பவும் தைரியமா இருக்கணும்.  எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும்  வாழணும்கிற நம்பிக்கையை மட்டும் விட்டுடக்கூடாது  எனக்கு சத்தியம் பண்ணித்தருவாயா?“ என்று கேட்டாய்.

 நான் உனக்கு சத்தியம் செய்து கொடுத்தேன்.  ஆனா ஜாக், அந்த சத்தியத்தை என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட நீ சற்று நேரத்திலேயே இறுதி யாத்திரையைத்துவங்கி விட்டாய். தனியாக கடலின் அடியில் என்னை அழைக்காமல் சென்று விட்டாய்.  நான் கடலில் மூழ்காமல் தப்பிவிட்டேன். ..ஆமாம் நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். காலம் உருண்டோடியது.   இன்னொரு வரைத் திருமணம் செய்தேன். அம்மாவானேன்.  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  டைட்டானிக் கப்பலில் இறந்தவர்களின் பட்டியலில் கூட உனது பெயர் இல்லை ஜாக். இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் உன்னைப்பற்றி இன்றுவரை யாரிடமும் ஒன்றும் சொன்னதில்லை இனியும் சொல்ல மாட்டேன். ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் கடலளவு ஆழத்தில் வெளியே சொல்ல முடியாத ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அங்கேதான் நீ.. என் காதலின் கடல் ராஜாவே..அங்கேதான் நீ..அன்றும். இன்றும் என்றும்...

இப்படிக்கு,ரோஸ்

கட்டுரை: திருவட்டாறு சிந்துகுமார் (பத்திரிகையாளர்), கன்னியாகுமரி மாவட்டம் , தொலைபேசி எண்: 7010179009

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment