‘கலையை உருவாக்குவதும் செயற்பாட்டாளர் பணியே!’- டி.எம்.கிருஷ்ணா நேர்காணல்

T M Krishna on NRC : பிரபல கர்நாடக இசைப் பாடகரான டி எம் கிருஷ்ணா, ’செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்கிற தன்னுடைய புதிய புத்தகத்தில், மிருதங்கத் தயாரிப்பாளர்கள் குறித்தும் அதற்குப் பின்னணியில் இருக்கும் சாதிய அரசியல் குறித்தும் எழுதி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

tm krishna, tm krishna carnatic vocalist, tm krishna interview, a southern music tm krishna, tm krishna new book, tm krishna sebastian and sons, tm krishna book on mrdangam makers, tm krishna shaheen bagh, tm krishna caa, tm krishna nrc, tm krishna indian express, indian express news
tm krishna, tm krishna carnatic vocalist, tm krishna interview, a southern music tm krishna, tm krishna new book, tm krishna sebastian and sons, tm krishna book on mrdangam makers, tm krishna shaheen bagh, tm krishna caa, tm krishna nrc, tm krishna indian express, indian express news

பிரபல கர்நாடக இசைப் பாடகரான டி எம் கிருஷ்ணா, ’செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்கிற தன்னுடைய புதிய புத்தகத்தில், மிருதங்கத் தயாரிப்பாளர்கள் குறித்தும் அதற்குப் பின்னணியில் இருக்கும் சாதிய அரசியல் குறித்தும் எழுதி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அவருடன் ஒரு நேர்காணல்:

உங்கள் முதல் புத்தகமான ’சதர்ன் மியூசிக்’கில் ஒரு அத்தியாயம், சாதியைப் பற்றியதாக இருந்தது. அண்மையில் வெளியிடப்பட்ட ’செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ நூலில், விலங்குத் தோலுடன் மற்ற பொருள்களையும் பயன்படுத்தி மிருதங்கத்தை உருவாக்குகின்ற- பெரும்பாலும் தலித் மக்களாக இருப்பவர்களின் வாழ்க்கையை கவனம்குவிப்பதாக இருக்கிறது. எதனால் இந்தக் கருவை உங்கள் புத்தகத்துக்காக நீங்கள் எடுத்தீர்கள்?

முதலாவது புத்தகம், இசை பற்றியும் அதன் வடிவம் தொடர்பான எண்ணம் பற்றிய ஒரு தியானம் போன்றது. அதில், சமூக சட்டகத்தின் ஒரு பாத்திரமாக சாதியும் இடம்பெறுகிறது. எந்த அத்தியாயத்தில் சாதியைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனோ அதில் எங்கும் இசைக்கருவி செய்பவர்களைப் பற்றி நான் குறிப்பிடக்கூட இல்லை. அந்தப் புத்தகத்தின் இரண்டாம் மூன்றாம் பதிப்புகளைக் கொண்டுவரப் போகும்போதுதான், ’அய்யய்ய.. நாம் மிருதங்கம் செய்துதருபவர்களைப் பற்றி சுத்தமாகத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோமே’ என்பது மனதில் பட்டது. அப்படியான கலைஞர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன்; ஏதோ ஒரு முறை சந்தித்திருக்கிறேன் என்பது மட்டும் நினைவு. என் சக கலைஞர்களுக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், எனக்கு அவர்களைப் பற்றி சுத்தமாக ஒன்றும் தெரியாது. அந்த கணத்தில்தான் மிருதங்கம் செய்பவர்களைப் பற்றியும் எப்படி அவர்கள் இந்தக் கருவிகளை உருவாக்குகிறார்கள் என்பதைப் பற்றி முழுமையாகவும் உரையாடலுக்கு உள்ளாக்குவதென நினைத்தேன்.

இந்தப் புத்தகத்தில் மிருதங்கம் செய்யும் பலரின் பெயர்களையும் மாற்றியிருக்கிறீர்கள். நீங்களே எடுத்துள்ள முடிவு இது! எதற்காக இந்த மாற்றம்?

அவர்களின் பெயரில் வெளியாகும் கருத்துகள் என்று உணர்வுக் கொந்தளிப்பை உள்ளடக்கியவை என்று தோன்றியதால், அவர்களின் பெயர்களை மாற்றினேன். கவனித்துப் பார்த்தால், சில மிருதங்க வாசிப்புக் கலைஞர்களின் பெயர்களையும் நான் குறிப்பிட்டிருக்கமாட்டேன். மிருதங்க உருவாக்கக் கலைஞர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு தொழில்ரீதியாக எந்தவிதப் பின்னடைவையும் நேர்ந்துவிடக்கூடாது என்பது எனக்கு முக்கியமாகப் பட்டது. அவர்களில் ஒருவர்கூட தங்கள் பெயர்களைக் குறிப்பிடவேண்டாம் என்று என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படாமல் காப்பதற்காக நானே முன்னுரிமையாக எடுத்துக்கொண்டேன். அது, அவர்களை மரியாதையாகப் பாதுகாப்பதாகவும் நான் உணர்ந்தேன்.

மாடுதொட்டியில் உள்ள இறைச்சிவெட்டுமிடம் குறித்த விவரணை மிகவும் விரிவாக இருக்கிறது. மிருதங்கம் செய்பவர்களின் வாழ்க்கையோடு மிருதங்க வாசிப்புக் கலைஞர்கள் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணம் இதுவாக இருக்கலாமோ? அந்த அளவுக்கு விலங்குகளும் அவை கொல்லப்படுவதும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் அயன்மையாக ஆகிவிட்டன.

மிருதங்கத்தை உருவாக்குவதும் அதற்கான பதப்படுத்தல் போன்றவற்றைச் செய்வதெல்லாம் முழுக்க அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அதாவது, இசைக்கருவிக்காக மாட்டைக் கொல்லவேண்டும்; அதன் தோலை உரிக்கவேண்டும்; அதைச் சுத்தம்செய்தாகவேண்டும் – அது நம் சட்டகத்தில் எங்கும் இல்லை. மிருதங்கம் செய்யும் கலைஞர்களைப் பற்றி எழுத விரும்பினால், அதற்கான தோல் எங்கிருந்து வருகிறது என்பதிலிருந்து தொடங்கவேண்டியது அவசியம். அது, ஒரு விலங்கிலிருந்து… வெட்டப்பட்ட சதை இரத்தத்திலிருந்து தொடங்கவேண்டும். இன்னும் அது கர்நாடக இசையுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் தூய்மை பற்றிய முழுமையான எண்ணப்பாட்டுக்கும் சவாலாக அமைகிறது. அதை விவரிக்கவேண்டும் என ஏன் நான் நினைத்தேன் என்றால், அந்த அனுபவம் என்னை மிகவும் சலனப்படுத்திய ஓர் அனுபவம் ஆகும். இது, தூய்மை, தூய்மையின்மை, அழுக்கு, மூலவடிவம் ஆகியவை பற்றிய முழுமையாகும். இவை இரண்டுமே நமக்கு மிக முக்கியமானது ஏனென்றால் யதார்த்தத்தில் இரண்டுமே இங்கு இருக்கின்றன. எனவே, தூய்மையானது அல்லது தூய்மையற்றது என எந்தக் கருத்தும் மெய்யானதாக இல்லை. அந்த கருத்தாக்கத்தை யாராவது கைக்கொள்வது நம்மை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக சாதிய மேல்நிலை போன்ற சலுகைப் பின்னணியிலிருந்து நாம் வந்திருக்கும் சூழலில், அது ரொம்பவும் படுத்துகிறது.

விலங்குகள் குடிக்கும் நீர், அவர்கள் பயன்படுத்தும் தோல் பகுதியைப் பற்றி மிருதங்கம்செய்வோர் ரொம்பவும் கவனமாக இருக்கிறார்கள். அந்தக் கருவியை உருவாக்கும் பின்னணி அறிவியல் நம்பமுடியாதபடி இருக்கிறது. இந்தப் புத்தகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னர் இதைப் பற்றி எந்த அளவுக்கு உங்களுக்கு தெரிந்திருந்தது?

அது என்னை வியப்பில் ஆழ்த்தக்கூடிய படைப்பறிவு. எந்த வகையான விலங்கைப் பயன்படுத்தவேண்டும், எந்தவகையானது அருமையான ஒலியைக் கொண்டிருக்கும் என்பதை – மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் ஒரு மாட்டைப் பார்த்ததும் மதிப்பிட்டுவிடுவார்கள். குறிப்பாக, கச்சேரி செய்யும் இசைக்கலைஞர்களுக்கென மிருதங்கங்களை உருவாக்கும்போது, இதைப் பார்க்கமுடியும். மிருதங்கத்தின் இசையொலி இன்ன தோலில் இருக்கிறது என்பதை அவர்கள் சொல்லிவிடுவார்கள். இறைச்சிக்காக வெட்டப்படும் ஏதோ ஒரு மாடு, ஆடு அல்லது எருமையின் தோலை அவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மிருதங்கம்செய்யும் கலைஞர்களுக்கு உகந்த தோல் எது என்பது நன்றாகத் தெரியும். இது முழுக்க அப்படியே அறிவியல்ரீதியிலானது.

மிருதங்கத்தை உண்டாக்கும் கலைஞர்களின் மேதைமைக்கு மதிப்பு இல்லை. இசைக்கலைஞர்களுக்கோ பெரு மதிப்புக்கு உரியவராக இருக்கிறார்கள். இதை எவ்வாறாகச் சொல்வீர்கள்?

இந்த நாட்டில், மிருதங்கம் செய்வதை ஏதோ நாலைந்து பொருள்களை oன்றுசேர்க்கிற ஒரு வேலை மட்டும்தான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இசை என்பது இசைக்கலைஞரிடம்தான் இருக்கிறது என்கிற கருத்து நம் மண்டைக்குள் ஏறி உட்காந்திருக்கிறது. அது, நம்முடைய அறிவு குறித்த எண்ணத்துக்கு சவால்விடுவதாக இருக்கிறது. அறிவை உருவாக்கும் செயல்முறை என்பது என்ன? சமூகமயமற்ற அறிவுச்செயல்பாடா ?எது அறிவு,எது அறிவு அல்ல என்பதை இந்த சமூகம் தீர்மானிக்கிறதா? கலை என்றால் என்ன, கைவினைத்திறன் என்றால் என்ன? அதில் எந்த அளவுக்கு சமூகப்படிநிலைப்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது? அதைப் பற்றித்தான் நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். மிருதங்கம் உருவாக்குவதை சமூகம் எந்த அளவுக்கு குறையாக மதிப்பிடுகிறது தெரியுமா? ஏனென்றால் அது எப்படி தயாரிக்கப்படுகிறது, யார் அதைச் செய்கிறார்கள் என்பதுதான்! எந்த மிருதங்க வாசிப்புக் கலைஞரும் அதை உருவாக்கக்கூடியவரா என சாதாரணமாகக்கூட யாரும் கேட்பதில்லை. ஆனால் மிருதங்கம் செய்பவரிடம் அவரால் அதை இசைக்கமுடியுமா எனக் கேட்டிருக்கிறேன். நான் இதற்காக எடுத்த நேர்காணல்கூட, இத்தகைய கருத்துக்களில் சில என்னிடமும் வேரூன்றியிருந்ததை எடுத்துக்காட்டும்.

புத்தகத்துக்கான நேர்காணலின்போது, சாதியைப் பற்றி உரையாடலில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் தாங்கலில்லாமல் இருந்தார்களா? ஓரிடத்தில் – ‘ முன்னர் அவர்கள் எங்களை ஒதுக்கி வைத்து பாகுபாடு காட்டினார்கள்; இப்போது கிட்ட சேர்த்துக்கொண்டு பாகுபாடாக நடத்துகிறார்கள்” என்று ஒருவர் குறிப்பிட்டிருப்பார் – அந்த இடம், மறக்கமுடியாத அளவுக்கு கடினமானது!

அந்த வாசகம், சாதியப் பாகுபாட்டை ரொம்பவும் ஆழமாக விவரித்துச்சொல்லும் இடம் என நினைக்கிறேன். தாராளவாதமோ வேறுவகையோ, சலுகைபெற்ற சமூகங்களின் பெரிய பிரிவுகளில், யாரும் கோவிலுக்குள் செல்லக்கூடாது என நிர்ப்பந்திப்பது, இரட்டை தம்ளர் முறை போன்ற – வெளிப்படையான பழக்கவழக்கங்களின் அடிப்படையில் மட்டுமே பாகுபாட்டைப் பார்க்கவேண்டும் என்கிற கருத்து நிலவுகிறது. இனிமேல் நாம் அப்படிச் செய்யமாட்டோம். ஆனால் உணவகத்தில் ஒரு கோப்பையில் தேநீரைப் பகிர்ந்துகொள்கிறோம். அது மட்டும் என்னைச் சாதியற்றவனாக மாற்றிவிடமுடியாது.

என்னுடைய சாதி எப்போதும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது.இயல்பாகவே நான் மதிக்கப்படுகிறேன்; மதிப்பிற்குரிய நபராகப் பார்க்கப்படுகிறேன். அதையும் மீறிச் செல்லவேண்டியதே மிகவும் முக்கியமானது. ஆனால், யதார்த்தத்தில் நான் சலுகைபெற்ற ஒரு பார்ப்பனன்(பிராமணன்) என்பதிலிருந்து விலகிவிடமுடியாது. அது ஒரு கடினமான உரையாடல். பார்த்தால், இந்தப் புத்தகத்தை ஒரு மிருதங்கம் செய்யும் கலைஞர்தான் எழுதியிருக்கவேண்டும். இங்கே மிக முக்கியமான சங்கதி என்னவென்றால், அவர்கள் என்னையும் என் நோக்கங்களையும் உறுதியாக நம்பினார்கள். சில நேரங்களில், கடினமான கேள்விகளைக் கேட்பதற்கு அதிகப்படியான நேரம் எடுத்துக்கொண்டது. சில நேரங்களில் எளிதாக இருந்தது. நபரைப் பொறுத்தும் அந்தந்த நபருடன் எனக்கு இருந்த நல்லுறவைப் பொறுத்தும் இது அமைந்தது.

‘அரசியல் மற்றும் சமூக ஒற்றுமையைக் குலைப்பதற்கு’த் தூண்டிவிடக்கூடியது எனக் காரணம்கூறி அண்மையில் உங்கள் புத்தக வெளியீட்டை நிறுத்த கலாச்சேத்ரா முடிவெடுத்தது. அதில், என்னதான் நடந்தது?

இது பற்றி நான் கலாச்சேத்ராவில் உள்ள யாரிடமும் பேசவில்லை. ஆனால், அவர்களின் கடிதத்திலிருந்து தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு முன்னணி நாளிதழில் வெளியான செய்திதான் பிரச்னையை உசுப்பிவிட்டதாகத் தெரிகிறது. அந்தச் செய்தியில் பசுவைப் பற்றியும் மிருதங்கக் கலைஞர் மணி ஐயர்எப்படி அதை எதிர்கொண்டார் என்பதாகவும் ஒரு பத்தியில் இருந்தது. அந்தப் பகுதி சுவையானதாகவும் எனக்குப் பட்டது. ஏனென்றால் பசுவை தெய்வமாக வணங்கும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர், அவரே அந்த மாட்டுத் தோலிலிருந்துதான் தன்னுடைய மிருதங்கம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்தவர் என்பதுதான்! இந்த இரண்டு விதயங்களையும் மனதுக்குள் ஓடவிட்டு விடைதேடப் பார்க்கிறார். அது அழகானது. கலாச்சேத்ராவைப் பொறுத்தவரை, அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஒரு பங்கு உண்டு என்று கருதுகிறேன்.

உங்கள் இசை மற்றும் எழுத்துக்கள் மூலம் உங்கள் அரசியல் பார்வையை வெளிப்படுத்தி வருகிறீர்கள். குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடந்துவரும் டெல்லி சாகின்பாக் போராட்டக் களத்தில் அண்மையில் உங்கள் நிகழ்ச்சி நடத்தினீர்கள். அரசியல் சூழல்களுக்கு கலைகள் உதவுமா?

சட்டென பதிலளிக்க முடியாத கேள்வி, இது. இது உதவமுடிந்தால் என்ன என்று எனக்குத் தெரியாது. செயற்பாட்டாளரிடமிருந்து கலைஞரைப் பிரிப்பது ரொம்பக் கடினம். பார்த்தோமானால், கலைப்படைப்பை உருவாக்குவதே சமூக செயற்பாட்டின் ஒரு பகுதிதான். எந்தக் கலையும் ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாக கேள்விகளைக் கேட்கக்கூடிய ஒன்றாக இருக்கும். கேள்விகள் தனிநபரையும் பெரிய அளவிலான உலகத்தையும் ஒன்றிணைக்கின்றன. செயற்பாட்டாளர் என்பது இப்போது கிட்டத்தட்ட பதவியைப் போல அதாவது ஒரு தலைமை நிர்வாக அதிகாரி அல்லது தலைமை நிதி அதிகாரி போல ஆகிவிட்டது. இது அபத்தமானது. எந்த குடிமகனும் ஒரு செயற்பாட்டாளர்தான்; இது ஒரு பதவி அல்ல. நீங்கள் அந்த வலையில் மட்டும் சிக்கிக்கொள்ளாவிட்டால், நாம் அனைவருமே ஜனநாயகத்தோடு இருப்பதன் மூலமாக, செயற்பாட்டாளர்களாகத்தான் இருப்போம்.

தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tm krishna shaheen bagh tm krishna caa tm krishna nrc

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com