என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளை... தமிழ் ஆசிரியரின் குடும்பத்துக்கு உதவி செய்யும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியரை மறக்காமல், அவரின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவது பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியரை மறக்காமல், அவரின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளை செய்து வருவது பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
TN Retd IAS Balachandran help his Tamil teacher family Tamil News

60 வருடங்களுக்கு முன்பு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியருடன் பாலச்சந்திரன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததுடன், ஆசிரியர் மறைவிற்குப் பிறகும் அவரது குடும்பத்தைக் கவனித்து வரும் தகவல் அப்பகுதியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் ஆசிரியர் ராமசாமி. இவரது மனைவி பட்டு. ராமசாமி மறைந்த நிலையில் பேரன் சரவணன் குடும்பத்துடன் பட்டு வசித்து வருகிறார். இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பால்ச்சந்திரன், தான் படித்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக இந்த ராமசாமி பாலச்சந்திரனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துள்ளார். அதன் நன்றிக்கடனாக பாலச்சந்திரன் எப்போது தஞ்சாவூர் வந்தாலும் ராமசாமி குடும்பத்தை பார்த்து விட்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை செய்து தந்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

Advertisment

அந்த வகையில், தஞ்சாவூர் வந்த பாலச்சந்திரன், நேமத்திற்கு சென்று பட்டுவைச் சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். அப்போது பட்டு வயது முதுமையால் அவதிப்பட்டு வருவதையும், மருந்து, மாத்திரை வாங்க முடியாமல் தவிப்பதையும் அறிந்துள்ளார். அத்துடன் பட்டுவின் பேரன் சரவணனிடம் ரூ.45,000 கொடுத்து கறவை பசு மாடு வாங்கி அதில் வரும் வருமானத்தில் பாட்டியைக் குறையில்லாமல் கவனித்துக் கொள் என அன்பு காட்டியுள்ளார். இந்த நேசத்தை உணர்ந்த பட்டு, `என் வயிற்றில் பிறக்கலைன்னாலும் தலப்புள்ளயா இருந்து என்னை தாங்குறியே தங்கம்' என்று நெகிழ்ந்திருக்கிறார். தமிழ் ஆசிரியரால் நான் ஆளானேன் உங்களை காக்க வேண்டியது என் கடமை என்ற பாலச்சந்திரனின் கைகளைப் பற்றி பட்டு முகம் புதைக்க அனைவரது கண்களும் ஆனந்த கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.

60 வருடங்களுக்கு முன்பு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியருடன் பாலச்சந்திரன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததுடன், ஆசிரியர் மறைவிற்குப் பிறகும் அவரது குடும்பத்தைக் கவனித்து வரும் தகவல் அப்பகுதியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மறைந்த தமிழ் ஆசிரியர் ராமசாமி மனைவி பட்டுவிடம் பேசினோம். அப்போது அவர் "திண்டுக்கல் சென்ட் மேரீஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் என் கணவர் ராமசாமி 37 வருடங்கள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு படித்த பாலச்சந்திரனுக்கு 7 மற்றும் 8ம் வகுப்பில் தமிழ் ஆசிரியராக என் கணவர் பாடம் சொல்லி கொடுத்துள்ளார். தமிழ் மீது பாலச்சந்திரன் வைத்திருந்த ஆர்வம் இருவரையும் நெருக்கமாக்கியுள்ளது. அதே போல் நடிப்பு மீதும் பாலச்சந்திரனுக்கு ஈடுபாடு இருந்துள்ளது. இதையறிந்தவர் படிப்பு மட்டுமின்றி பள்ளி விழாக்களில் நாடகம் இயற்றி பாலச்சந்திரனை நடிக்க வைத்துள்ளார். தமிழ் வசன உச்சரிப்புகளை பாலச்சந்திரன் அழகாகப் பேசியதில் வியந்த என் கணவர் கம்பராகவும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு வந்த பிறகும், இந்த சின்ன வயசில் பாலா தமிழ் மீது வைத்திருக்கும் பற்றை சிலாகித்துப் பேசுவார்.

இதைத் தொடர்ந்து உயர் படிப்பு முடிந்து பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிட்டார். என் கணவரும் ஓய்வு பெற நாங்கள் நேமத்துக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். எங்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். எனக்குப் பிறகு உன்னை யார் கவனித்து கொள்வார் என்று என் கணவர் அடிக்கடி கவலைப்படுவார். இந்நிலையில் மிதுனாபூரில் கலெக்டராக இருந்த பாலச்சந்திரன் நாங்கள் இருக்கும் இடத்தை அறிந்து வீட்டுக்கே வந்து விட்டார். என் கணவருக்கு சந்தோஷம் தாங்கல. எங்களை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றதுடன் இரண்டு நகரங்களில் தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்து சிறப்புரையாற்ற வைத்து அழகு பார்த்தார்.

Advertisment
Advertisements

அதன் பின்னர் வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவார். நாங்கள் கேட்காமலேயே எங்கள் தேவைகள் அறிந்து செய்து கொடுப்பார். எங்களுடைய ஐந்து ‍ பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டோம். 2017ல் என் கணவர் இறந்து விட்டார். அதன் பிறகு பாலச்சந்திரன் வரமாட்டார் என்று தான் நினைத்தேன். ஆனால் நான் உங்களுடைய மூத்த பிள்ளைமானு வந்து நின்றவர், இன்று வரை எங்களை கைவிடவில்லை. தற்போது நான் பேரனுடன் வசிக்கிறேன். பேரன் சிரமப்படுவதை அறிந்த அவர் நான்கு வருடங்களுக்கு முன்பு கறவை பசு மாடு வாங்கிக் கொடுத்தார். மருந்து, மாத்திரை வாங்க, ஓட்டு வீட்டை சீரமைக்க வரும் போதெல்லாம் எங்கள் கஷ்டத்தை தீர்த்து விட்டு செல்வார்.
என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளை அவர். அவருடைய இந்த செயல் ஆசிரியர் மீது வைத்திருக்கும் அன்பை உணர்த்துகிறது" என்றார் 

செய்தி: க.சண்முகவடிவேல்.

Thanjavur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: