மகாசிவராத்திரி பெருவிழா இந்தாண்டு 7 திருக்கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் தமிழக அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
மகா சிவராத்திரி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சுக்கிரவார பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து வரும் இந்த நன்னாளில் சிவாலயங்களில் 4 கால அபிஷேகங்கள் நடைபெறும்.
இந்தநிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டு முதன்முதலில் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் மகாசிவராத்திரி விழாவானது பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு கூடுதலாக, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், மகாசிவராத்திரி விழா கடந்தாண்டு 5 சிவத்திருத்தலங்கள் சார்பாக பெருவிழாவாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது போல், இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகாசிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 2 கோயில்களையும் சேர்த்து 7 கோயில்கள் சார்பில் வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் ஆன்மிகப் பெரியோர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“