இன்று குரு பெயர்ச்சி தினம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள குரு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குருபகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். நவக்கிரக கோவிலில் குருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இன்று (சனிக் கிழமை) காலை 9.31 மணிக்கு பிரவேசம் செய்தார்.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, அபிஷேக ஆராதனை நடை பெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர், சாமி, அம்மன், சனிபகவான், முருகன் சன்னதிகளில் சாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இது போல தமிழகம் முழுவது உள்ள குரு கோவில்களில் சிறப்பு பூஜைகளும், ஆரதனையும் நடைபெற்றது. காலை முதலே குரு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.