இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலை சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொறு ஆண்டும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை இலவசமாக பார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலை, கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்ப வளாகங்களில் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு பார்க்கலாம் என மாமல்ல தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கலைச் சின்ன வளாகத்துக்குள் சென்று சிற்பங்களை அருகில் கண்டு ரசிக்க தொல்லியல் துறை சார்பில் உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இன்று கட்டணமின்றி சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் காலை முதலே சுற்றுலாவழிகாட்டிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டனர்.
இதேபோல மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலையும் இன்று முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“