ஜப்பான் நாட்டில் கருவுறுதல் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால், இதற்கு தீர்வு காணும் வகையில் அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருகிறது.
இது தொடர்பாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்புக்காக மக்கள் தங்கள் வேலையை விட்டுக் கொடுக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என டோக்கியோ பெருநகர சட்டப்பேரவையின் நான்காவது அமர்வு உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் கருவுறுதல் விகிதம் மிகக் குறைந்த நிலையில் இருக்கும் சூழலில், இந்த புதிய கொள்கை தம்பதிகளை பெற்றோராக ஆக்குவதை ஊக்குவிக்கிறது. சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இளைஞர்கள் குடும்பங்களைத் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், கருவுறுதல் விகிதம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதால் கவலை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
"நாடு தற்போது கடினமான சூழலில் இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என கோய்கே தெரிவித்துள்ளார்.
சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகத்தின்படி, ஜப்பானில் கடந்த ஆண்டு வெறும் 7,27,277 பிறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஜப்பானில் அதிக நேர வேலை செய்யும் கலாசாரம் உள்ளது. இதுவே, குழந்தைகளை பெற்றுக் கொள்வது மற்றும் வேலையை கவனிப்பது என பெண்களுக்கு சுமையாக உள்ளது. இதுவும் குறைவான கருவுறுதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.
உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் தொழிலாளர் பங்கேற்பில் கடந்த ஆண்டு பாலின ஏற்றத்தாழ்வாக, ஆண்களுக்கு 72 சதவீதம் மற்றும் பெண்களுக்கு 55 சதவீதம் என இருந்துள்ளது. இந்த சதவீதம் அதிக வருமானம் ஈட்டும் மற்ற நாடுகளை விட அதிகம்.
மறுபுறம், வாரத்திற்கு மூன்று நாள் விடுப்பு திட்டம், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது. இது குழந்தை வளர்ப்பு மற்றும் பணி ஆகிய இரண்டையும் சரியாக கையாள உதவும் எனவும் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திட்டம் டோக்கியோ பெருநகர அரசின் 1,60,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் வகையில் உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் பல வணிக நிறுவனங்கள் இதே முறையை சோதனை முயற்சியாக மேற்கொண்டன. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை சரியாக கையாள முடிந்ததாகவும், அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் சீராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.