Tomato Rice recipe without onion: தமிழ்நாட்டில் வெங்காயம் சேர்க்காமல் சமையல் இல்லை. ஆனால், தற்போது மலையளவிற்கு ஏறி இருக்கும் வெங்காயத்தின் விலை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், வெங்காயம் இல்லை என இனி குழம்ப வேண்டிய அவசியமில்லை. கொஞ்சமும் வெங்காயம் பயன்படுத்தாமல் சுவையான தக்காளி சாதம் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
வெங்காயம் இல்லா தக்காளி சாதத்திற்கு முதலில் இன்ஸ்டன்ட் தக்காளி பொடியைத் தயாரித்துக்கொள்ளவேண்டும்.
இன்ஸ்டன்ட் பொடி செய்வதற்குத் தேவையான பொருள்கள்:
தக்காளி - 1 கிலோ
கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
உடைத்த உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்
மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 12-15
தாளிப்பதற்கு:
கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த சாதம் - 1 கப் (200 கிராம்)
இன்ஸ்டன்ட் மிக்ஸ் செய்முறை:
முதலில் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதனை இரண்டு நாள்கள் வரை காயவைக்கலாம். பிறகு, காய்ந்த தக்காளியோடு கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, மல்லி விதைகள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்கு கடாயில் சேர்த்து, எண்ணெய்யில்லாமல் வறுத்துக்கொள்ளவேண்டும். சூடு ஆறியதும் இதனை நன்கு பொடியாக அரைத்தெடுத்தால், இன்ஸ்டன்ட் தக்காளி பொடி ரெடி.
தக்காளி சாதம் செய்முறை:
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அதனோடு 1 முதல் 1 1/2 டேபிள் ஸ்பூன் அளவு அரைத்து வைத்த இன்ஸ்டன்ட் தக்காளி பொடியைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இந்தக் கலவையோடு வேகவைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிடவும். இறுதியில், மல்லி இலைகளைச் சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.
இந்த இன்ஸ்டன்ட் பொடியைக் காற்று புகாத பாட்டிலில் மூடிவைத்து 4 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"