பரபரப்பான வாழ்க்கை சூழலில் எல்லோருக்குமே சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி சுற்றுலா செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் கூகுளில் குறிப்பிட்ட சுற்றுலா தலங்களின் விவரங்களை தேடுவார்கள். அதனடிப்படையில், நடப்பு ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அஜர்பைஜான்:
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது அஜர்பைஜான். ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆசியா அருகே அமைந்துள்ள இந்நாட்டின், கால நிலை மற்றும் இயற்கையான சூழல், சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் அதிகளவு அஜர்பைஜானில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலி:
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு, இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடற்கரை, ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் என ரம்மியமான சுற்றுலா தலங்களை விரும்பும் அனைவருக்கும் பிடித்தமானதாக பாலி விளங்குகிறது.
மணாலி:
ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள மணாலி, பெரும்பாலான சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது. குறிப்பாக, மணாலிக்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற மாதமாக ஏப்ரல் அமைந்துள்ளது. அந்த மாதத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பம் நிறைந்திருக்கும். ஆனால், மணாலி இனிமையான காலநிலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் மணாலி, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கஜகஸ்தான்:
இந்த பட்டியலில் அடுத்த இடத்தை பிடிப்பது கஜகஸ்தான். மலைகள், பாலைவனம் என அதன் பலதரப்பட்ட நில அமைப்புக்காகவே கஜகஸ்தானை ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
இந்த பட்டியலில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியும் இடம்பெற்றுள்ளது. அங்கு ராமர் கோயில் திறக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம். இதேபோல், ஜெய்ப்பூர், தெற்கு கோவா, காஷ்மீர் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“