/indian-express-tamil/media/media_files/2025/04/07/NiLk4vcHLgnlNwqqVrZX.jpg)
கோடை காலம் என்றாலே வெயிலுடன் சேர்த்து சுற்றுலாவும் நம் நினைவுக்கு வரும். இந்த விடுமுறையை நாட்களில் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவிற்குள் சுற்றுலா செல்லக் கூடிய டாப் 10 இடங்களின் தொகுப்பை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Best places to travel in India in 2025: Top 10 offbeat holiday destinations during summers
1. ஆலி, உத்தரகாண்ட்
"இந்தியாவின் பனிச்சறுக்கு தலைநகரம்" என்று இதனை அழைக்கும் வகையில் ஏராளமான மலை முகடுகள் இங்கு அமைந்துள்ளன. ஆப்பிள் பழத்தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான பனி மூடிய சிகரங்களால் ஆலி நகரம் நிரம்பி இருக்கும். எனவே, சாகசத்தை விரும்புபவர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக ஆலி அமைகிறது.
2. சத்பால், ஜம்மு & காஷ்மீர்
தெற்கு காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்குகளில் அமைந்திருக்கும் சத்பால் பகுதி, இன்று வரை பலரும் அறியாத இடமாக இருக்கிறது. காஷ்மீரின் பரபரப்பான சுற்றுலா மையங்களைப் போலல்லாமல், இது குறைவான மக்களின் கவனத்தையே பெற்றுள்ளது. அடர்ந்த பைன் காடுகள், புல்வெளிகள் மற்றும் தெளிவான மலை நீரோடைகள் போன்ற அனைத்தும் சத்பாலின் அழகை மேலும் அதிகரிக்கிறது. மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சத்பால் மிகவும் பிடிக்கும்.
3. அஸ்காட், உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் அஸ்காட் அமைந்துள்ளது. இந்த ஊர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மலை முகடுகளுக்கு பெயர் பெற்றது. அஸ்காட் வனவிலங்கு சரணாலயம், இமயமலை கருப்பு கரடிகள், கஸ்தூரி மான்கள் மற்றும் பனிச்சிறுத்தைகளின் தாயகமாக உள்ளது. புதிய அனுபவத்தை தேடும் மக்களுக்கு உகந்த இடமாக இது விளங்கும்.
4. ஷோஜா, இமாச்சல பிரதேசம்
ஜலோரி கணவாய்க்கு அருகில் அமைந்துள்ள ஷோஜா, கண்கவர் காட்சிகளையும் பசுமையான இயற்கையையும் வழங்குகிறது. இது ஒரு அற்புதமான இமயமலை கிராமமாகும். எழில் கொஞ்சும் அழகுக்காக அறியப்பட்ட ஷோஜா, மலையேற்றம், பறவைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை ரசிக்க சிறப்பாக இருக்கும்.
5. முன்சியாரி, உத்தரகாண்ட்
முன்சியாரி, மலையேற்றம் மற்றும் சாகச பிரியர்களுக்கு சொர்க்கமாகும். பஞ்சசூலி சிகரங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய குக்கிராமம், பனி மூடிய மலைகள், ஆர்ப்பரிக்கும் ஆறுகள் மற்றும் அல்பைன் புல்வெளிகள் நிரம்பி காட்சி அளிக்கிறது. இயற்கை மற்றும் அமைதியை விரும்புபவர்கள், தங்கள் கோடை காலத்தை இங்கு செலவிடலாம்.
6. நெல்லியாம்பதி, கேரளா
'ஏழைகளின் ஊட்டி' என்று குறிப்பிடப்படும் நெல்லியாம்பதி, தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்ற கேரளாவின் அமைதியான மலைபகுதி ஆகும். பனி மூடிய மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை இதன் சிறப்பம்சம். கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.
7. மவ்லின்னாங், மேகாலயா
'ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்' எனப் புகழ் பெற்ற மவ்லின்னாங், சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். மேகாலயாவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மூங்கில் மர வீடுகள் அதிகளவில் உள்ளன. இதன் பசுமையான அழகும், வாழ்க்கை முறையும் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த இடமாகும்.
8. கஜ்ஜியார், இமாச்சல பிரதேசம்
‘இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் கஜ்ஜியார், அடர்ந்த காடுகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட ஒரு அற்புதமான பகுதி ஆகும். அதன் புல்வெளிகள், அழகிய ஏரிகள் போன்றவற்றை காண்பதுடன், பாராகிளைடிங் மற்றும் குதிரை சவாரி போன்ற சாகசத்திலும் ஈடுபடலாம்.
9. கெம்மங்குண்டி, கர்நாடகா
மேற்குத் தொடர்ச்சி மலையில் மறைந்திருக்கும் பொக்கிஷமான கெம்மங்குண்டி, அதன் பசுமையான நிலப்பரப்புகளாலும், நீர்வீழ்ச்சிகளாலும் அறியப்படுகிறது. குளிர்ந்த காலநிலை, அழகிய மலைகள் மற்றும் காபி தோட்டங்கள் போன்றவை இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்ப தேர்வாக அமைகிறது. ஹெப்பே நீர்வீழ்ச்சி மற்றும் இசட் பாயிண்ட் மலையேற்றம் ஆகியவை இந்தப் பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள்.
10. யுக்சோம், சிக்கிம்
யுக்சோம், சிக்கிமில் உள்ள ஒரு வரலாற்று மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமமாகும். இது காஞ்சன்ஜங்கா தேசிய பூங்காவிற்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. மடங்கள், மலையேற்ற பாதைகள் மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்ற யுக்சோம், மலையேற்றம் செய்பவர்களுக்கும், அமைதி தேடுபவர்களுக்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.