ஒவ்வொரு ஆண்டும் உடல் எடையை குறைக்க வேண்டும் என புத்தாண்டின் போது உறுதிமொழி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். இதற்காக பிரத்தியேக டயட்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மக்கள் கடைபிடிக்கின்றனர். அதனடிப்படையில், இந்த ஆண்டு மக்களால் 5 வகையான டயட்கள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டன.
கீட்டோ டயட் (Keto Diet)
கீட்டோ டயட் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும், நடப்பு ஆண்டில் அதிகப்படியான மக்கள் இதனை பின்பற்றினர். இந்த டயட்டில் கார்போஹைட்ரேட்டுகள் எடுப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. இதில், நல்ல கொழுப்புகள் தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த டயட்டில் கார்போஹைட்ரேட் குறைவான காய்கறிகளுடன், இறைச்சி மற்றும் மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளப்படும்.
DASH டயட்
இந்த டயட் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டயட்டில் உப்பின் அளவு குறைத்து பின்பற்றப்படுகிறது. மேலும், கொழுப்பு நிறைந்த உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இந்த டயட் குறித்த தகவல்களை பெருவாரியான மக்கள் இணையத்தில் தேடியதாக கூறப்படுகிறது.
தாவர அடிப்படையிலான டயட் (Plant-based Diet)
உடல் எடையைக் குறைக்க சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களால் பின்பற்றப்படும் டயட் முறை இது. இதில் காய்கறிகளை போன்று தேவையான நேரத்தில் பால் பொருள்களையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த டயட்டில் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். மேலும், இந்த டயட் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்தியதரைக்கடல் டயட் (Mediterranean Diet)
இதுவும் ஒரு வகையான தாவர அடிப்படையிலான டயட் தான். இதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் உட்கொள்ளப்படும். இந்த டயட்டில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் கொழுப்பாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள்.
அழற்சி எதிர்ப்பு டயட் (Anti-inflammatory Diet)
நடிகைகள் வித்யா பாலன், சமந்தா போன்றோர் இதனை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. இந்த டயட், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தான், உடலில் அழற்சி அதிகரித்து எடை கூடுகிறது. இதனை, அழற்சி எதிர்ப்பு டயட் கட்டுப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.