Hair Growth Diet: அழகான கூந்தல் உங்கள் ஆளுமையுடன் தொடர்புடையது. ஆரோக்கியமான, வசீகரமான கூந்தல் தான் ஒவ்வொரு பெண்ணின் விருப்பம். இதற்காக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மையிலேயே உங்கள் தலைமுடி மாதத்திற்கு 0.5 அங்குலம் (1.25 செ.மீ) மற்றும் வருடத்திற்கு 6 அங்குலங்கள் (15 செ.மீ) தான் வளரும். இருப்பினும், இது முடியின் வளர்ச்சிக்காக நாம் சாப்பிடும் உணவு, முடி பராமரிப்பு மற்றும் மரபியல் காரணிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. வயது மற்றும் மரபியல் போன்ற காரணிகளை நீங்கள் மாற்ற முடியாது, ஆனால் உணவை மாற்றியமைப்பதால், முடியின் நிலையை மேம்படுத்த முடியும்.
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்தலுக்கும் மிக முக்கியம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆகையால் கீழே நாங்கள் குறிப்பிடும் உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், வசீகரிக்கும் கூந்தலை சிரமமின்றி பெறலாம்.
முட்டை
புரதம் மற்றும் பயோட்டினின் சிறந்த மூலம் முட்டை. முடியின் நிலையை மேம்படுத்தவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க இது உதவுகிறது. மயிர்க்கால்கள் பெரும்பாலும் புரதத்தால் ஆனவை. உணவில் புரதம் இல்லாததால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. கரோட்டின் எனப்படும் முடியின் புரதத்தை உற்பத்தி செய்வதற்கு பயோட்டின் மிக முக்கியமானது.
கீரைகள்
கீரைகள் பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. இதில் இரும்பு, விட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. இவை அனைத்துமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். கீரையில் உள்ள விட்டமின் ஏ சீபத்தை சுரக்க உதவுகிறது. இந்த சீபம் உச்சந்தலையில் ஆரோக்கியமான எண்ணெய்களை சுரந்து, தலையில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. தினம் ஒரு கப் (30 கிராம்) கீரை சாப்பிடுவதால், நமக்குத் தேவையான 50% விட்டமின்களை பெறலாம்.
மீன்
சால்மன், ஹெர்ரிங் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் இவற்றில் அதிகம் நிறைந்துள்ளன. ஒமேகா 3 நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக நிறைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. ஒரு கிழங்கில் (சுமார் 114 கிராம்) தினசரி நமக்குத் தேவையான விட்டமின் ஏ-வின் தேவைகளை விட நான்கு மடங்கு அதிகமாக பீட்டா கரோட்டின் உள்ளது. இது முடியின் டெக்ஸ்ச்சரை பாதுகாத்து, முடி உதிர்வைக் குறைக்கிறது.
அவகடோ
அவகொடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட், சுவையானது, சத்தானது மட்டுமல்ல, ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணம். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் விட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. ஒரு அவகடோவில் (சுமார் 200 கிராம்) நமக்கு தினசரி தேவையான விட்டமின் ஈ தேவைகளில் 21% உள்ளது.
சீட்ஸ்
குறைந்த கலோரிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை சீட்ஸ் கொண்டிருக்கின்றன. இயற்கையான எண்ணெய்களைக் கொண்ட இந்த சீட்ஸ், உச்சந்தலைக்கு நன்மை செய்து, சரியான அளவு பி.எச் அளவை பராமரிக்க உதவுகின்றன. விட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் இவற்றில் உள்ளது. ஒரு அவுன்ஸ் (28 கிராம்) சூரியகாந்தி விதைகளில் தினசரி வைட்டமின் ஈ தேவைகளில் கிட்டத்தட்ட 50% இருக்கிறது. ஆளி விதைகள், சியா விதைகள், பாதாம், முந்திரி ஆகியவற்றை தினமும் சாப்பிடுங்கள்.
பீன்ஸ்
தாவரத்தில் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது பீன்ஸ் தான். இது முடி வளர்ச்சிக்கு அவசியம். அதோடு பீன்ஸில் துத்தநாகமும் அதிகமுள்ளது. இது முடி வளர்ச்சிக்கும் மறு சுழற்சிக்கும் உதவுகிறது.