/indian-express-tamil/media/media_files/2025/07/09/toxic-relationship-signs-tamil-dr-khanthini-2025-07-09-21-11-03.jpg)
Toxic Relationship signs Tamil Dr Khanthini
உறவுகள்... மனித வாழ்வின் அச்சாணி. ஆனால் சில உறவுகள் இனிமையைத் தருவதற்குப் பதிலாக, நஞ்சாக மாறி நம்மைப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, முற்றிலும் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியற்றவர்கள் (Emotionally Immature) ஒரு உறவில் இருக்கும்போது அது ஒரு நச்சு உறவாக (Toxic Relationship) மாறுகிறது. என மனநல மருத்துவர் காந்தினி வரையறுக்கிறார். இந்த நச்சு உறவுகளில் ஆண், பெண் அல்லது இருவருமே மன முதிர்ச்சியற்றவர்களாக இருக்கலாம்.
நீங்கள் 20 அல்லது 30 வயதுகளில் இருந்தால், உங்கள் உறவில் இந்த நான்கு அறிகுறிகள் இருக்கிறதா என்று உற்று கவனியுங்கள். இந்த அறிகுறிகள் இருந்தால், அது ஒரு நச்சு உறவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர் காந்தினி எச்சரிக்கிறார்.
1. பழிபோடுதல் மற்றும் சார்ந்திருத்தல்
உங்கள் உறவில், எல்லா பிரச்சனைகளுக்கும் நீங்கள் தான் காரணம் என்று உங்களைக் குறை கூறுவார்களா? அதே சமயம், தங்களுடைய தேவைகளுக்காக உங்களையே சார்ந்திருப்பார்களா? இது ஒரு நச்சு உறவின் முக்கிய அறிகுறி. அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல், எப்போதும் உங்களையே பலிகடா ஆக்குவார்கள். ஆனால் உங்களை விட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பது போல நடந்துகொள்வார்கள்.
2. இரக்கமின்மை மற்றும் சுயநலம்
உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நபர்களுடன் நீங்கள் இருக்கிறீர்களா? உங்கள் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் விருப்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது நச்சு உறவின் மற்றொரு அடையாளம். உங்களுடைய கஷ்டங்களையோ, ஆசைகளையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
3. ஆக்ரோஷமான எதிர்வினைகள்
சிறு சிறு வாக்குவாதங்கள் வந்தால்கூட பயங்கர ஆக்ரோஷமாகப் பதிலளிப்பார்கள். உங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மேனிபுலேட் செய்வார்கள், மிரட்டுவார்கள். இது உறவில் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும்.
4. உணர்ச்சிப்பூர்வமான ஏற்றத்தாழ்வுகள்
இந்த உறவில் ஒரு நாள் மழையில் நனைவது போல ரொமாண்டிக்காக உணர்வீர்கள். ஆனால் அடுத்த நாளே பாலைவனத்தில் தனியாக விடப்பட்டதைப் போல வெற்றிடமாக உணர்வீர்கள். இந்த உணர்ச்சிப்பூர்வமான ஏற்றத்தாழ்வுகள் உங்கள் மன ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.
இந்த நான்கு அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால், தயவுசெய்து உங்கள் உறவைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள். தேவைப்பட்டால், உங்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மன ஆரோக்கியம் மிக முக்கியம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.