/indian-express-tamil/media/media_files/2025/07/18/thalaiyil-poo-vaipathal-benefits-2025-07-18-16-07-55.jpg)
Benefits of keeping flowers on the head by women
பெண்களை 'பூவையர்' என்று அழைப்பது வெறும் வார்த்தையல்ல, அது நம் கலாச்சாரத்தில் மலர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. உலகிலேயே தலையில் பூச்சூடும் வழக்கம் நம் நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. பிற தொன்மையான நாகரிகங்களில் ஒற்றை மலராகவோ, மலர் கிரீடமாகவோ அணியும் வழக்கம் இருந்தாலும், சரம் சரமாக கூந்தலில் மலர்களைச் சூடும் வழக்கம் நம் தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பு.
இந்த வீடியோவில் பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக பேசுகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி.
பூச்சூடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
தலைக்கு பூ வைத்தால் அழகு மட்டும்தான் என்றில்லை. அந்த மலர்களில் இருந்து எழும் நறுமணம் நமக்கே தெரியாமல் நம்முள் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
மன அமைதி மற்றும் கோபம் குறைப்பு: மலர்களின் நறுமணம் மன அமைதியை அளித்து, கோபத்தைக் குறைக்கிறது.
சுரப்பிகளின் சீரான இயக்கம்: மூளையில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சீராகச் சுரக்கத் தூண்டுகிறது. 'மகிழ்ச்சி ஹார்மோன்' என்று சொல்லப்படும் செரோடோனின் போன்ற சுரப்பிகள் சிறப்பாகச் செயல்பட மலர்களின் மகரந்த வாசனை மிகவும் உதவுகிறது.
ESP சக்தி அதிகரிப்பு: சில ஆராய்ச்சிகள், பெண்கள் பூச்சூடும்போது அவர்களின் 'ESP' (Extra Sensory Perception) சக்தி அதிகரிப்பதாகக் கூறுகின்றன. இது கூர்மையான மதிநுட்பத்தை (நுண்ணறிவு) குறிக்கிறது. அதாவது, ஒரு பெண் இருக்கும் இடத்தில், தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்குத் தோன்றினால், அங்கே யாராவது உண்மையிலேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். கிராமங்களில் 'கூர் கெட்டவ' என்று திட்டுவது கூர்மையான மதி இல்லாதவளைக் குறிக்கிறது. பெண்களுக்குக் கூர்மையான மதியையும், நிதானத்தையும், பொறுமையையும், மகிழ்ச்சியையும் மலர்கள் அளிக்கின்றன.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவள் பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் அவளுடன் பயணிக்கும் பொருள் மலர். "பூவும் பொட்டுமாய் இரு" என்று ஆசீர்வதிப்பதன் மூலம் இதை அறியலாம். திருமணத்திற்குப் பிறகு பூ வைப்பதில்லை என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறு. ஒரு பெண் எந்தக் காலத்திலும் பூ வைத்துக்கொள்ளலாம். பூ ஒரு பெண்ணிற்குப் பிறந்த காலம் முதலே சொந்தமானது. கணவர் இல்லை என்றாலும் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்று அந்தக் காலத்தில் சில சமயங்களில் சொன்னது, பெண்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக இருக்கலாம். ஆனால், இயல்பான வாழ்க்கையில் எல்லாப் பெண்களும் எப்போதும் மலர்களைச் சூடிக் கொள்ளலாம்.
வீட்டிலிருக்கும் போதும் பெண்கள் தலைவாரி, பூச்சூடி இயல்பாகவே தங்கள் நாளைத் தொடங்கினால், அது மிகவும் நல்ல நாளாக அமையும். கோபமோ, மன வருத்தமோ இல்லாத போதுதான் பெண்கள் பூச்சூடுகிறார்கள். எனவே, தினசரி பூச்சூடுவதன் மூலம் மகிழ்ச்சியை வரவழைக்கலாம். இளம் பெண்களுக்குப் பூச்சூடும் வழக்கத்தைப் பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். இது அவர்களுக்கு ஓர் அழகு; ஓர் ஆபரணம். 'ஆட்டிசம்' பாதிப்புள்ள பெண் குழந்தைகளுக்குப் பூச்சூடினால், அவர்களின் அறிவுத்திறன் மேம்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் குழந்தைகளின் தாய்கள் பூச்சூடும்போது, அந்த வாசனை குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கி, நல்ல வளர்ச்சியை அளிக்கும். நறுமணம் நிறைந்த இடத்தில் இருக்கும்போது ஏற்படும் மன மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார் தேச மங்கையர்கரசி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.