பூஜைப் பொருள்களில் பிரதான இடத்தை பெறுவது குங்குமம். ஆனால், இந்த குங்குமத்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்து இருக்கிங்களா? அதற்கான வழிமுறைகள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
குங்குமம் செய்வதற்காக முதலில் காய் மஞ்சளை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை சிறிது சிறிதாக உரலில் போட்டு இடித்துக் கொள்ளலாம். இதையடுத்து, படிகாரத் துண்டு ஒன்றை எடுத்து, அதனை அம்மியில் வைத்து இடித்து பொடியாக்க வேண்டும்.
அதன் பின்னர், வெங்காரத்தையும் அம்மியில் இடித்து பொடியாக்கிக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து, எலுமிச்சை சாறு தனியாக எடுக்க வேண்டும். இப்போது தயாரித்து வைத்த அனைத்து பொருள்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
இவற்றை கலக்கும் போது மஞ்சளின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக குங்கும நிறத்திற்கு மாறுவதை நம்மால் காண முடியும். இந்தக் கலவையை இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைத்த பின்னர் மஞ்சளின் நிறம் முற்றிலுமாக மாறி இருக்கும். அதையடுத்து, மஞ்சளை 15 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
நன்றாக காய்ந்த மஞ்சளை அரவை இயந்திரத்தை பயன்படுத்தி, பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் இறுதியாக சுத்தமான நெய் சேர்க்க வேண்டும். குங்குமம் ஒட்டிக் கொள்ளும் தன்மையை அடைவதற்காக நெய் சேர்க்கப்படுகிறது.
இந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் இரசாயனங்கள் கலக்காத சுத்தமான குங்குமத்தை தயாரித்து விடலாம்.