கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழக அரசு சமூகநலத் துற, தமிழ்நாடு எயட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் 'மிஸ் கூவாகம்-2025' அழகிபோட்டி நேற்று (மே12) நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயா மண்டபத்தில், 3 சுற்றுகளாக முதல்நிலை தேர்வு நடந்தது. தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் செயலர் கங்கா நாயக் வரவேற்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/05/13/lZdYZwtzWp7tVheRiZz8.jpg)
முதல் சுற்றில் 25 திருநங்கைகள் பங்கேற்றனர். அதில் அவர்களது நடை, உடை, பாவனை அடிப்படையில் 15 திருநங்கைகள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்கள் எதிர்கால லட்சியம் குறித்து எடுத்துக் கூறினர். தொடர்ந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்து, தங்களது அழகை வெளிப்படுத்தினர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி திடலில் இரவு 7:00 மணிக்கு, மிஸ் கூவாகம் தேர்வுக்கான இறுதிச்சுற்று தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர்அருணா வரவேற்றார்.
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் திருநங்கை தலைவர் மோகனாம்பாள் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் விமலா, குயிலி, சுபிக்ஷா, நூரி, கங்கா, சோனியா, ஷர்மிளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சினிமா நடிகர்கள் தேவிபிரியா, வனிதா விஜயகுமார், சஞ்சனாசிங், கோவை பாபு, அருண்சுவாமிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேரிடமும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சிறந்த முறையில் பதில் அளித்த நெல்லையை சேர்ந்த ரேணுகா “மிஸ் கூவாகம்-2025” அழகி பட்டத்தை வென்றார். கள்ளக்குறிச்சி அஞ்சனா 2-ம் இடத்தையும், கோவை ஆஷ்மிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, சேலம், சென்னையிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளாமான திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.