/indian-express-tamil/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-2025-09-11-14-23-33.jpg)
"மரங்களை காப்போம்" - என்று மரங்களை சுற்றி இறுக்கும் இரும்பு வேலிகளை அகற்றும் பணியினை தண்ணீர் அமைப்பு தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். இந்தப் பணியில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமையில், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசியர் கி.சதீஸ்குமார், என்.தயானந்த், அ.சரண் பாரதி மற்றும் பலர் பொன்மலையடிவாரம், செந்தண்ணீர்புரம் பகுதிகளில் உள்ள மரங்களின் இறுக்கப்பட்ட இரும்பு வேலிகளை அகற்றி மரங்களை பாதுகாத்தனர்.
இது குறித்த தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் நீலமேகம் தெரிவிக்கையில்; மரத்திற்கு போடப்பட்ட இரும்பு வேலி, ஆரம்பத்தில் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கலாம், குறிப்பாக இளம் மரக்கன்றுகளுக்கு. இது கால்நடைகள், வண்டிகள், அல்லது மற்ற வெளிப்புற சேதங்களிலிருந்து மரத்தைப் பாதுகாக்கிறது. இருப்பினும், மரம் வளர வளர, அதன் தண்டு அகலமாகும்போது, இந்த இரும்பு வேலி அதற்கு ஒரு பெரிய இடையூறாக மாறும். வேலி மரத்திற்கு எப்படி இடையூறாகிறது என்பதை பார்ப்போம்.
மரம் இறுக்கப்படுதல் (Girdling):
மரம் வளர வளர, இரும்பு வேலி அதன் தண்டுடன் ஒட்டிக்கொண்டு, அதன் மேல் அடுக்கான பட்டையை (bark) அழுத்தும். இதனால், மரத்தின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய திசுக்கள் (vascular tissues) பாதிக்கப்படும். இது "girdling" என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை நீண்ட நாட்களுக்கு நீடித்தால், மரத்தின் வளர்ச்சி தடைபட்டு, அது இறந்துவிடும். இரும்பு வேலியின் கூர்மையான முனைகள் அல்லது அழுத்தத்தால் மரத்தின் பட்டையில் காயங்கள் ஏற்படலாம். இந்த காயங்கள் மூலம் நோய்க்கிருமிகள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் மரத்திற்குள் நுழைந்து, மரத்தை சேதப்படுத்தும்.
இயல்பான வளர்ச்சிக்குத் தடை:
இரும்பு வேலி மரத்தின் தண்டு இயல்பாக அகலமாவதை முழுமையாகத் தடுக்கிறது. இதனால், மரம் பலவீனமடைந்து, காற்றிலோ அல்லது புயலிலோ எளிதில் உடைந்து விழும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே "மரங்களை காப்போம்" என்று இது போல திருச்சியில் எங்கெங்கே மரங்கள் இருக்கிறது என்று ஆய்வு செய்து, பாதிப்புக்கு உள்ளான இரும்பு வேலி அகற்ற தண்ணீர் அமைப்பு தன்னார்வலர்கள் புறப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இதுபோல மரங்களில் இரும்புவேலி அகற்றும் பணி செய்ய உதவுமாறு தண்ணீர் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.