திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில், மார்ச் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஆனந்த விகடன் குழுமத்தின் 'பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2025' நடைபெறவுள்ளது. 7-வது முறையாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை, 7-ஆம் தேதி காலையன்று அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைக்கிறார். மேலும், தன்னுடைய 150 ஏக்கர் விவசாய நிலத்தில் மேற்கொண்டு வரும் நெல் சாகுபடி, மாடு வளர்ப்பு குறித்தும் அவர் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இக்கண்காட்சியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான 'சவுக்கு' சங்கர் கலந்து கொள்கிறார். சவுக்கு மர கழிவுகளை தூளாக்க தான் கண்டுபிடித்த இயந்திரம் குறித்து அவர் உரையாற்றவுள்ளார்.
இதேபோல், தஞ்சாவூர், மரபுசார் கால்நடை மருத்துவ மையத்தின் முன்னாள் தலைவரான முனைவர் புண்ணியமூர்த்தி, "ஆடு, மாடு, கோழிக்கான மூலிகை கால்நடை மருந்துகளை தயார் செய்யும் முறைகளும் அதை பயன்படுத்தும் வழிமுறைகளும்" என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.
கொல்லத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முனைவர் கமலேசன் பிள்ளை, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் (EDII) முதன்மை செயல் அதிகாரி வசந்தன் செல்வம், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியான மனோகரன் போன்றோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கண்காட்சியில், பண்ணைக் கருவிகள், சொட்டுநீர் பாசன கருவிகள், பம்ப் செட்கள், விதைகள், வங்கிகள், மதிப்புக் கூட்டிய பொருள்கள் அடங்கிய அரங்குகள் இடம்பெற உள்ளன. கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 30, மாணவர்களுக்கு ரூ. 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்தி - க. சண்முகவடிவேல்