திருச்சி மாவட்டம், திருநெடுங்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகளில் அவரின் கல்லீரலின் மேற்பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்த அரசு மருத்துவமனை டீன் குமரவேல் அதற்கான ஏற்பாடுகளை செய்து லேப்ராஸ்கோபி மூலம் சக மருத்துவர்கள் உதவியுடன் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரவேல் தெரிவிக்கையில்; சில நாட்களுக்கு முன் திருநெடுங்குளத்தில் இருந்து முதியவர் ஒருவர் வயிற்று வலி காரணமாக நம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது கல்லீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதயம், நுரையீரல், மயக்க மருந்து நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் அளித்த லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் கல்லீரலின் வலது பக்கத்தில் இருந்த கட்டி 60 சதவீதம் கல்லீரலுடன் சேர்த்து அகற்றப்பட்டது. இதயம் வெளியேற்றும் ரத்தத்தில் 25 சதவீதம் கல்லீரலுக்கு செல்வதால் மிகவும் கவனத்துடன் நவீன கருவியை பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் கல்லீரலின் மேற்பகுதியில் இருந்த 1.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது.
மனித உடலில் செரிமானத்திற்கு தேவையான ஹார்மோன், புரோட்டீன், ரத்த உறையும் காரணிகள், எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது, செரித்த உணவுகளை உறிஞ்சுவது, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளும் கல்லீரல் மனிதர்களின் உடலில் ஒரு முக்கிய உறுப்பு என்பதால் அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.
மனித உடலில் முக்கிய உறுப்பு கல்லீரல் என்பதால் மக்கள் இது தொடர்பான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வைரஸ் பாதிப்பு, அதிகமாக மது அருந்துவது, பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் கல்லீரல், உணவுக்குழாய், கணையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை அகற்றும் சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.
இந்த சிகிச்சையின் போது திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தலைமையில், துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில் மருத்துவர்கள் கண்ணன், ஷங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.