திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 11-வது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
Advertisment
திருச்சி மாவட்டம் நவாப் தோட்டம் உறையூரைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர், மூளையில் பக்கவாதம் ஏற்பட்டு 27.11.2022 அன்று பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச் செயலிழப்பு இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதியவரை சொந்த ஊரான திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதை அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதனை உணர்ந்த முதியவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்து, முதியவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நேரு
இதனை அடுத்து அரசின் Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி தகுதியான நபருக்கு உடல் தானம் செய்யப்பட்டது. அதன்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒருவருட காலமாக மூச்சுத்திணறல், இரத்தக் கொதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் குழு மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி இப்போது நலமுடன் உள்ளார்.
இதன்மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 11-வது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.
மூளைச் சாவு அடைந்தவரிடமிருந்து பெறப்பட்ட மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“