திருச்சிராப்பள்ளி திருவரம்பூர் கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொன்மை மன்றம் சார்பில் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் சிறப்பு கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா தலைமை வகித்தார்.
செயலர் சாந்தி, துணைச் செயலர் விஜயலட்சுமி, உறுப்பினர்கள் சந்திரா, ரேவதி, ஷோபனா, யோகாம்பாள், தனலட்சுமி, ரேவதி, தீபா, சத்யா உள்ளிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்களை சேகரித்து வரலாற்றை எடுத்துக் கூறும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
யோகா ஆசிரியர் விஜயகுமார், பாண்டியன், ரமேஷ், முகமது சுபேர், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நாணயங்கள், பணத்தாள்கள், சுடுமண் பானைகள், எழுத்தாணிகள், உலோக ஆயுதம், அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள் எனப் பல பொருட்களை காட்சிப் படுத்தினர்.
யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், மனித இனம் தோன்றிய குறுகிய காலத்தில் சாதித்தவை பல. தொலைத்தொடர்புச் சாதனங்கள், ஆகாய விமானங்கள், இன்டர்நெட், வீடு நிறைய மின்னணுக் கருவிகள் ஆகியவையெல்லாம் நவீன கால மக்களுக்கு மிகச் சாதாராணமாகிவிட்டன.
ஆதிகாலத்தில் காடுகளிலும், குகைகளிலும் வசித்துவந்த மனித இனம், குரங்கு இனத்திலிருந்து மனித இனமாகப் பிரிந்தது. லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித சமூகங்கள் கூட்டங்களாக வாழ்ந்து வந்தனர்.
ஒவ்வொரு கூட்டமும் தனக்கென்று ஒரு மொழியை உருவாக்கிக்கொண்டு பேசினர். சேர்ந்து வேட்டையாடுவது, கருவிகளை உருவாக்குவது, குழந்தைகளைப் பாதுகாப்புடன் வளர்ப்பது, குடிசைகள் அமைப்பது போன்ற பணிகளில் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
இறந்தவர்களைக் குழிதோண்டி முதுமக்கள் தாழியில் புதைத்தனர்.
அடுத்தக் கட்டத்தில் எண்ணங்களை வாய் மூலமாக மட்டுமின்றி, கோட்டுப் படங்கள் மூலமாகப் பரிமாறிக்கொள்ளும் முறை உருவானது.
குகைகளின் சுவர்களில் எழுதப்பட்ட படங்களும், குறியீடுகளும் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் செய்திகளைத் தெரிவிப்பனவாக அமைந்தன.
இதுதான் விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சம்.
விலங்குகள் தமது குட்டிகளுக்கு இரை தேடவும், வேட்டையாடவும் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால், சித்திர வடிவில் அவற்றைக் கற்பிக்கும் முறையைக் கண்டுபிடித்தது மனிதன்தான்.
பல குகைகளில் ‘மம்மத்’ யானையைக் கொல்ல பல மனிதர்கள் கையாண்ட உத்திகள் படமாக வரையப்பட்டிருக்கின்றன.
வேட்டையாடுவதைப் பற்றி மட்டுமல்லாது, தரையில் குடிசைகள் அமைப்பதைப் பற்றியும் குகைச் சுவர்களிலும் பாறைகளிலும் விளக்கப் படங்கள் வரையப்பட்டன.
நான்கு குச்சிகளை நட்டு, அவற்றின் மேல் முனைகளில் விலங்குகளின் தோல்களையும் இலைகளையும் மாட்டி கூரைகளும் சுவர்களும் அமைக்கப்படுவது சித்திரமாகப் பதிவுசெய்யப்பட்டது. அது அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிக் கையேடுபோல உதவியது.
ஒவ்வொரு தலைமுறையும் வீடு கட்டும் கலையில் சிறுசிறு புதுப் புனைவுகளையும் அறிமுகப்படுத்தியது. இதுபோன்ற படிப்படியான திறன் வளர்ச்சி காரணமாக, இன்று உறுதியும் பாதுகாப்பும் வசதியும் மிக்க வானுயரக் கட்டிடங்களை அமைக்கும் திறமை ஏற்பட்டது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் பிறந்தது. மக்கள்தொகை பெருகியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விவசாயம் செய்து உணவு தானியங்களைச் சாகுபடிசெய்யும் முறையைக் கண்டுபிடித்தான்.
விலங்குகளின் பின்னால் ஓடி வேட்டையாடியும், காய் கனிகளைப் பறித்து அல்லது சேகரித்து உணவுபெற வேண்டிய தேவை மறைந்தது. எல்லாப் பருவங்களிலும் தடையின்றி உணவு கிடைக்க விவசாயம் உதவியது. இரை கிடைக்கும் இடத்தைத் தேடி இடம்பெயர வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. ஓரிடத்தில் வீடு கட்டி வாழ்ந்து, விவசாயத்தின் மூலம் உணவு பெறுவது தொடங்கியது. சிறுசிறு குடியிருப்புகள் உருவாயின.
ஒரு கிராமத்துக்கான தொடக்கமாக இது அமைந்தது.
இத்தகைய சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சிபெற்றன. மக்கள் அதிக அளவில் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அது பேச்சு வடிவ மொழியிலும் எழுத்து வடிவத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படக் காரணமாயிற்று.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் புரட்சி. உயிரியல், வானவியல், இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் அற்புதமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதையடுத்து, தொழிற்புரட்சி ஏற்பட்டது. மனிதர்களின் உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்தது.
புதிய புதிய வாகனங்களும், கருவிகளும் உடல் உழைப்புக்கான தேவையைக் குறைத்து, ஓய்வுக்கும் உல்லாசத்துக்குமான அவகாசத்தை அதிகரித்தன. நுண் கலைகள் உத்வேகம் பெற்றன.
பூமியில் மனித இனம் தோன்றிச் சில லட்சம் ஆண்டுகளே ஆன நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் அது சாதித்தவை மிகவும் அற்புதமானவை. ஒவ்வோராண்டும் புதிய புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு பழையன கழிந்து புதியன புகுந்து கொண்டிருக்கின்றன என்றார்.
இந்த கண்காட்சியினை ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கண்டு வியந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.