திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் ஊழியர் நீதிபதியின் தொடர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்ற ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதற்கு நீதி கேட்டு இன்று தமிழகம் முழுவதும் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு; எடமலைப்பட்டி புதூர் ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் அருண் மாரிமுத்து (வயது 36). இவர், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரது இறப்பு குறித்து அவரது வீட்டார் காவல்துறையினரிடம் தெரிவிக்கையில், அருண் மாரிமுத்து பணிச் சுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
காவல்துறையினர் இறப்புக்கான உண்மையான காரணத்தை பதிவு செய்யாமல் முதல் தகவல் அறிக்கையில் வேறு விதமாக பதிவு செய்ததை கண்டித்தும், இவரது இறப்புக்கு நீதி கேட்டும், அவரது உறவினர்கள் திருச்சி அரசு பொதுமருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்த தகவல் அறிந்த தில்லைநகர் உதவி ஆணையர் தங்கப்பாண்டியன் தலைமையிலான போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அருண் மாரிமுத்து குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அருண் மாரிமுத்துவுக்கு சுகன்யா என்ற மனைவி, 3 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக நீதிபதியிடம் முறையிட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு நீதிமன்ற ஊழியர் சங்கம் சார்பில் அருண்மாரிமுத்து இறப்புக்கு உரிய விசாரணை நடத்தக்கோரி நீதிமன்ற வாசல் முன்பு நீதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் தெரிவிக்கையில்; நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றோம், மனித உரிமை மீறல்கள் இங்கு நடைபெறுகிறது. காலை பணிக்கு வந்தால் இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டுக்குச் செல்லும் சூழல் நிலவுகிறது.
ஒரு சில நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் மீது அடக்கு முறையை கையாளுகின்றனர். அந்த வகையில் திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி அவருக்கு கீழ் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மீது அடக்கு முறையை கையாண்டு இருக்கிறார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தப் போக்கு திருச்சியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதிலும் நீதிமன்றங்களில் நீதிபதிகளால் பல்வேறு வகையில் ஊழியர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக இன்றைய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிந்த அருண் மாரிமுத்துவின் அகால மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், அருண் மாரிமுத்து மீது பணி ரீதியாக தொடர்ந்து தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்து மனரீதியாக அவரை பாதிப்படையச் செய்த்தாகவும் தெரிவித்தனர்.
அவரது இறப்பிற்கு காரணமான நீதிபதியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர் மீது குற்ற மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும், மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதித்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பணிப்பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தினை வலியுறுத்தினர்.
இன்றைய தினம் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக மாநிலத் தலைவர் T.செந்தில்குமார் மற்றும் மாநிலச் செயலாளர் P.செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர்கள் முன்னிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் ஒருமித்த முயற்சியில், நூற்றுக்கணக்கான ஊழியர்களின் பங்களிப்பில் மிக எழுச்சியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும், இன்று (28.02.2025)(வெள்ளிக் கிழமை) மாலை 06.00 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் முன்பாக அனைத்து ஊழியர்களையும் ஒன்று திரட்டி மிக எழுச்சியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே,தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் அனைத்து மாவட்ட மையங்களும், மேற்படி ஆர்ப்பாட்டத்தினை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் முன்பாக இன்று (28.02.2025)(வெள்ளிக் கிழமை) மாலை 06.00 மணிக்கு அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன் மிக எழுச்சியாக நடத்தி நமது ஒற்றுமையை பறைசாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்