திருச்சியில் அரசு மருத்துவமனை மற்றும் சட்ட கல்லூரி வளாகத்தை நவீனப்படுத்தி பல்வேறு வசதிகள் உடன் புதிதாக கட்டடங்கள் கட்டப்படவுள்ள நிலையில், அந்த கட்டங்கள் கட்டுவதற்கான இடத்தில் புங்கமரம், மரமல்லிமரம், வேப்பமரம், உதியமரம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சுமார் 30 க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இந்த மரங்களை எந்த பாதிப்பும் இல்லாமல் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேசன் மற்றும் அவரது குழுவினர் இந்த மறு நடவு செய்யும் பணிகளை கோவை மாவட்டத்தை சேர்ந்த கிரீன்கேர் சுற்றுச்சூழல் அமைப்பினரிடம் வழங்கினர். இந்த மறு நடவு செய்யும் பணிகளை கிரீன்கேர் அமைப்பின் நிறுவனர் சையது தலைமையிலான குழுவினர், மாற்றம் அமைப்பின் குழுவினர் பார்வையிட்டு பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இதனை தொடர்ந்து அனைத்து மரங்களும் மறு நடவு செய்யப்பட்டது. இதில் பெரும்பாலன மரங்கள் மீண்டும் துளிர் விட்டு வளர தொடங்கி மிகவும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இந்த மறு நடவு செய்யப்பட்ட மரங்களை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் பார்வையிட்டனர். திருச்சியில் இந்த பணிகளை சிறப்பாக செய்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேசன், உதவிப் பொறியாளர் சந்தீப்குமார் மற்றும் கிரீன்கேர் அமைப்பின் நிறுவனர் சையது மற்றும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வரும் தூய்மை பணியாளர்கள் லதா, ஜெயராணி, சாவித்ரி, பிலோமின்மேரி, தங்கையன், குமார், மாரியம்மாள், கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், பொருளாளர் வசந்த கோகிலா, ஒயிட் ரோஸ் பொதுநல அமைப்பின் தலைவர் சங்கர், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆறுமுகம், மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“