உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் பெண்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கும் நிகழ்வு தனியார் வளாகத்தில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிபடுத்த முடியாத அளவிற்கு பல தடைகள் அவர்களுக்கு குடும்பத்தில் இருந்தும் இந்த சமூகத்தில் இருந்தும் இருந்தது. அப்படிப்பட்ட தடைகளை தகர்த்து விட்டு பல போராட்டங்களை கடந்து பெண்கள் தங்களது திறமைகளை கல்வி விளையாட்டு அரசியல், அரசு மற்றும் சமூக பணிகள் மற்றும் தனியார் துறைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சாதித்து வருகின்றனர்.
அப்படி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து சாதனை புரிந்து வரும் பெண்களுக்கு மகளிர் தினத்தில் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்டத்தின் சமூக நல அலுவலர் மா.நித்தியா கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகளை வகித்து, சமூக பணிகளை செய்து வரும் பெட்காட் மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா, கண்ணன், தாய் நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் ஹப்சி சத்தியாராக்கினி, காயத்ரி, இறகுகள் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா.மரிய மெர்சி, மகிழ்வித்து மகிழ் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. ஹேமாவதி, இரத்த சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி, போச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகாதார பெண் தன்னார்வலர் அல்லிகொடி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜி தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியாளர் பள்ளி மாணவி மேகா உள்ளிட்டோருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் நித்தியா தனது சிறப்புரையில்; முன்பை விட தற்போது பல நல்ல முன்னேற்றத்தை பெண்கள் அடைந்து வருகின்றனர். இருந்தாலும் இன்றும் பெண்கள் சாதனைகளை புரிய அவர்களுடைய அடிப்படை உரிமைகளை பெற பெண்கள் தத்தம் குடும்பத்தில் மற்றும் சமூகத்திலும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். என்ன பிரச்சனைகள் வந்தாலும் பெண்கள் தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும். தற்போது பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் வந்துள்ளன, ஆகவே பெண்கள் தைரியமாக இருந்து அவர்களின் திறமைகளை வெளிபடுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், அறிஞர் அண்ணா சிட்டிசன் ரைட்ஸ் அண்ட் லீகல் புரொடக்ஷன் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கினார். எக்ஸல் I.A.S.அகடமியின் நிர்வாக இயக்குநர் ரோட்டேரியன் நாகராஜன், வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் கோவிந்தசாமி, பரிமளா, ஷக்தி, ஈஸ்வரன், ஷர்மிளா பானு மற்றும் மாற்றம் அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயிற்சியாளருமான சுரேஷ்பாபு மைக்கேல், தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.