சின்ன பட்ஜெட்ல மனசு நிறைவா ஒரு டூர் போகணும்னு முடிவு பண்ணுனீங்கன்னா கண்டிப்பா பச்சமலையை மறக்காதீங்க என்கிறார்கள் பச்சைமலையைச் சுற்றிப்பார்த்த சுற்றுலாப் பயணிகள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தளம் பச்சமலையாகும். கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்களில் முக்கியமானதாக இருக்கும் இந்த பச்சமலையில் அருவிகள், காட்சிமுனைகள் என பார்ப்பதற்கு இடங்களும் இருப்பதால், திருச்சிக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பச்சைமலை சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் இருக்கிறது இம்மலை. பச்சைமலை தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு என்று மூன்று கிராமங்களாக பிரிக்கப்பட்டு அங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.
பச்சைமலை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லை என்கிறார்கள் சுற்றுலாப்பயணிகள்.
ஆனாலும், இங்கு தங்குவதற்கு அரசு விடுதியை தவிர வேறு வசதிகள் இல்லை, அதேபோல பொழுதுபோக்கவும் பெரிய வசதிகள் இல்லாத நிலை இருப்பதுதான் மிகப்பெரும் வேதனை என்கின்றனர் சுற்றுலா பயணிகள்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும் ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவவுள்ளனர். இந்த வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இந்த வசதிகளை மேம்படுத்தவுள்ளனர்.
பச்சைமலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி என்ற ஊரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும், ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“