திருச்சி காவேரி மருத்துவமனையில் தென் தமிழகத்திலேயே முதன்முறையாக, பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு அதிநவீன ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், சிக்கலான இதயப் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த அரிய சிகிச்சை குறித்து திருச்சி காவேரி மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. காவேரி மருத்துவமனை குழும நிர்வாக இயக்குனரும், மூத்த இதய நோய் நிபுணருமான டாக்டர் செங்குட்டுவன் இந்த சாதனையை விவரித்தார்.
அவர் கூறுகையில், பிறந்து வெறும் 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தைக்கு இதய வால்வு மிகக் குறுகிய நிலையில் இருந்தது. இந்த தீவிர இதயப் பிரச்சனையால் குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. அதேபோல, 11 நாட்களான, 1.5 கிலோ எடையுள்ள மற்றொரு பெண் குழந்தைக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கும் இதய நோய் இருந்தது.
இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கும் காவேரி மருத்துவமனையின் திறமையான குழந்தை இதயவியல் மருத்துவர்கள் டாக்டர் எஸ். மணிராம் மற்றும் டாக்டர் வினோத்குமார் ஆகியோர் துரிதமாக இதய நோய்களைக் கண்டறிந்து, பிறந்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே சரியான நேரத்தில் ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளித்து குணப்படுத்தினர். இந்த சிகிச்சைகளுக்கு, தொடைப் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் மூலம் மிகச் சிறிய துல்லியமான துளைகள் மட்டுமே போதுமானதாக இருந்தது.
48 மணி நேரமே ஆன குழந்தையின் நிலையில், இதயம் நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் வால்வு கடுமையாக சுருங்கியிருந்தது (கிரிட்டிக்கல் பல்மோனரி வால்வு ஸ்டெனோசிஸ்). இதனால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டது. இந்த குழந்தைக்கு பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி என்னும் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், ஒரு சிறிய பலூன் தொடை இரத்தக் குழாய் வழியாக செலுத்தப்பட்டு, குழந்தையின் குறுகிய வால்வு வெற்றிகரமாக விரிவாக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக குணமடைந்து, பிறந்த ஐந்தாவது நாளிலேயே நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியது.
மற்றொரு பதினொரு நாள் குழந்தையானது தொடர்ச்சியான சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தது. மருந்துகளின் உதவியும் செயற்கை சுவாசத்தின் தேவையை குறைக்கவில்லை.
இதயத்தில் இருந்த அசாதாரண இரத்த நாளமே இதற்கு முக்கிய காரணம். பிறப்பின்போது மூடப்பட வேண்டிய இந்த இரத்த நாளம் மூடாமல் இருந்தது. இது பேடண்ட் டக்டஸ் ஆர்டிரியோசஸ் (Patent Ductus Arteriosus - PDA) என்று அழைக்கப்படுகிறது. இதற்கான தீர்வாக, அந்த திறப்பை அடைக்க பிக்கோலோ எனப்படும் 4x2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய அடைப்பான் சாதனம் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பிறகு, குழந்தையின் சுவாசம் 48 மணி நேரத்திற்குள் சீரானது, மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இத்தகைய அதிநவீன சிகிச்சை திருச்சியில் மட்டுமல்ல, தென் தமிழகத்திலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் டாக்டர் செங்குட்டுவன்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது திருச்சி காவேரி மருத்துவமனையின் பொது மேலாளர் மாதவன் மற்றும் மருத்துவர்கள் கே. செந்தில்குமார், ஜி.பிரவீன் குமார், டி.செந்தில்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்