/indian-express-tamil/media/media_files/2025/01/25/oemUJ4ebzpDgXyM1xwMA.jpeg)
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது. தற்போது 15-வது தேசிய வாக்காளர் தினத்தை அனுசரிக்கும் வகையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் சுமார் 2500 மாணவர்களால், தேசிய வாக்காளர் தின குறியீடு வரைந்து வண்ணமிடப்பட்டது. அதில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மருத்துவ, வேளாண்மை, செவிலியர், பார்மசி, பிசியோதெரபி, கலை அறிவியல், கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
“வாக்களிப்பது போல் எதுவும் இல்லை நான் உறுதியாக வாக்களிக்கிறேன்” ((Nothing like voting, I vote for sure) என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டது. வாக்களிப்பது நமது கடைமை 100% வாக்களித்தல் மற்றும் அனைவரும் தவறாது வாக்களித்தலை உணர்த்தும் வகையில் வாக்காளர் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் முறை வாக்காளர்களாகிய மாணவர்கள் தெரிவித்ததாவது, “இந்தியாவின் எதிர்காலம் எங்களை போன்ற மாணவர்கள் கையில் தான். எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை. சாதி, மதம், மொழி இனம் கடந்து தொலைநோக்கு திட்டங்களை கொண்ட தகுதியான வேட்பாளர்களுக்கு மட்டுமே எங்களுடைய வாக்கு. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள் நூறு சதவிதம் வாக்களிப்போம். மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்," என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
மேலும் இந்த உறுதிமொழியை பின்பற்றுமாறு தங்களுடைய உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை தெரியபடுத்தி வலுவான ஜனநாயக நாட்டை கட்டமைக்க உறுதுணையாக இருப்பேன் என்றும் அனைத்து மாணவர்களும் உறுதி எடுத்து கொண்டனர்.
நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், முதன்மையர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.