திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழர் அளவைகளை இல்லத்திலேயே காட்சிப்படுத்தினர்.
பத்மஸ்ரீ தாமோதரன் தமிழர் அளவை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழர் அளவை முறைகள் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், "மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு. உணவின் தேவையால் உழவுத் தொழில் இன்றியமையாதது ஆகிறது. நிலம் சார்ந்த தொழில்களை மேற்கொண்டு இருந்த தமிழர்கள் பண்டமாற்று முறையின் மூலம் விளைந்த பொருட்களை தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அவ்வகையில் நெய்தல் நில மக்கள் உப்பையும் மீனையும் கொடுத்து மருத நில மக்களிடமிருந்து நெல்லை பெற்றுக் கொண்டதை சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பண்டமாற்று முறையிலிருந்து வணிகத் தொழிலின் வளர்ச்சியால் அளவை முறைகள் வளர்ச்சி அடைந்தன. களத்தில் தானியத்தை அளப்பதற்கு மரக்கால் பயன்பட்டது.
பெரிய மரக்கால், சின்ன மரக்கால் என வழக்கிலிருந்தன. வீட்டு உபயோகத்திற்குப் படி எனப்படும் இரும்பு அளவு பயன்பட்டது. பெரிய படி, அரைப்படி, கால்படி, அரைக்கால் படி, வீசம்படி, அரை வீசம்படி போன்ற படிகள் இன்றுகூட வீடுகளில் உள்ளன. படியை உழக்கு என்று குறிப்பிடுவார்கள். 11/2 லிட்டர் அளவு என்பது ஒருபடி ஆகும். நான்கு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு பெரிய மரக்கால், இரண்டு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு சிறிய மரக்கால் எனப்பட்டன.
/indian-express-tamil/media/post_attachments/62b5ac6b-395.jpg)
முதல் மரக்கால் நெல்லை சாக்கிற்குள் கொட்டும்போது, லாபம் என்று சொல்வார்கள்; ஒன்று எனச் சொல்லும் வழக்கமில்லை. தானியங்களை அளப்பதற்கு கிலோ, குவிண்டால், டன் என ஆங்கிலேயே அளவீடுகள் வழக்கத்துக்கு வந்துவிட்டாலும் பாரம்பரியம்மிக்க படி, பக்கா, மரக்கால் போன்றவை இன்னமும் பெரும்பாலான வீடுகளில் உள்ளது.
2 படி கொண்டது, ஒரு பக்கா. 4 படி கொண்டது, ஒரு மரக்கால். 6 மரக்கால் கொண்டது, ஒரு பறை.2 பறை கொண்டது, 1 கலம். 2 கலம் கொண்டது, 1 மூட்டை. 60 மரக்கால் கொண்டது, ஒரு உறை. நெல், தானியங்களை அளந்து போடும்போது, பத்தாவது மரக்கால் போட்டதும், அதை ஒரு ‘ஓக்கு’னு கணக்கு வெச்சுக்குவாங்க.
தமிழர் அளவைகளில் எண்ணல் அளவைகள், நிறுத்தல் அளவைகள், நில அளவைகள், நீட்டல் அளவைகள், முகத்தல் அளவைகள்,பெய்தல் அளவைகள், கால அளவைகள், நாணய அளவைகள், உடற்கூறு அளவைகள்.
தொழில்சார் அளவைகள், அளவைக்கருவிகள், அளவைசார் சொற்கள் ஆகியவை இலக்கியங்களிலிருந்து தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து தமிழர்களின் அறிவுத்திறனும் அறிவியல் நுட்பமும் புலப்படுகின்றன என தமிழர்கள் பயன்படுத்திய அளவைகள் குறித்து எடுத்துரைத்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்