திருச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பறவைகள் பூங்காவிற்கான நுழைவுக் கட்டணம் அதிகமாக இருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி அய்யாளம்மன் படித்துறை அருகே நேற்று (பிப் 10) புதிதாக பறவைகள் பூங்கா திறக்கப்பட்டது. இதனை துணை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 200-ம், சிறுவர்களுக்கு ரூ. 150-ம் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்கு வருகை தரும் மக்கள், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளிக்கலாம். இது தவிர சாஃப்ட் பிளே, ஏா் ஹாக்கி, பேஸ்கெட் பால், ப்ரூட் நிஞ்ஜா, பீட் சஃபேட், ரோலா் கோஸ்டா், ஃபிஷ் ஸ்பா, ரோபோட் மெசஜ் சோ், 7 டி திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ள ஒரு டிக்கெட் விலை ரூ. 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில விளையாட்டுகளுக்கு 2 டிக்கெட் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்தக் கட்டணம் அனைத்தும் அதிகப்படியாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாதாரண திரையரங்கிற்கு சென்றாலே ஒரு டிக்கெட் விலை ரூ. 120 தான் என மக்கள் கூறுகின்றனர். மேலும், முதுமலை யானைகள் முகாமில் கூட நுழைவுக் கட்டணம் ரூ. 50-க்கும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சியின் பிரபலமான பட்டாம்பூச்சி பூங்காவிற்கும் குறைந்த கட்டணம் என்ற நிலையில், புதிதாக திறக்கப்பட்ட இந்த பறவைகள் பூங்காவில் ரூ. 200 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
எனவே, சாமானிய மக்களும் இந்த பூங்காவிற்கு வருகை தரும் அளவிற்கு கட்டணத்தை விரைவாக குறைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பூங்காவை நிர்வகிக்கும் ஒப்பந்த ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஊழியர்கள், கட்டணம் குறைப்பு குறித்து மேலிடத்தில் தெரிவிக்கபட்டதாகவும், அதற்கான பதில் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
செய்தி - க. சண்முகவடிவேல்