திருச்சி துறையூர் அடுத்துள்ள புளியஞ்சோலை அடர்ந்த வனப்பகுதி மற்றும் நீரோடையைக் கொண்டது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக கொல்லிமலையின் அடிவாரமாக கருதப்படும் புளியஞ்சோலையில் உள்ள நீரோடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து மகிழ்கின்றனர்.
திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், துறையூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நீரோடையில் குளித்து மகிழ்கின்றனர். பயணிகள் வரவு அதிகரிப்பின் காரணமாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புளியஞ்சோலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக கொல்லிமலையில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை நீர் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி வழியாக புளியஞ்சோலைக்கு வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வருகின்றனர்.
புளியஞ்சோலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு அனைத்து விதமான முன்னேற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் செய்துள்ளனர். தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால், துறையூரில் இருந்து புளியஞ்சோலைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீர்வரத்து தொடர்ந்து சீராக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.