திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட காட்டூர் அடுத்துள்ள பாலாஜி நகர் 39 ஆவது வார்டு பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. தொடர்ந்து பணிகள் நிறைவுற்றதாக கூறப்படும் நிலையில் சாலையில் தார் சாலைகள் போடப்பட்டன.
இந்த நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர சீரமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கட்டடங்கள் கட்டுவதற்கு பாரங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி சாலையில் ஏற்படும் பள்ளத்தில் சிக்கி மாட்டிக் கொள்கின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஹாலோ பிளாக் கல் ஏற்றி வந்த லாரியானது பள்ளத்தில் சிக்கி மாட்டிக்கொண்டது.
இதனால் அவ்வழியாக வரக்கூடிய கார், பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்கள் வர இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் கிரேன் மூலம் பள்ளத்திலிருந்து சரக்கு வாகனத்தை மீட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/02/jT6B4FHeNPKLCk19HYeE.jpg)
இதுபோன்று இப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களின் பாகங்கள் சேதமடைந்து அதன் உரிமையாளர்களுக்கு வீண் செலவீனங்கள் ஏற்படுகின்றன.
இனியும் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக சீரமைத்து தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
க.சண்முகவடிவேல்