/indian-express-tamil/media/media_files/2025/08/27/pillaiyar-kolukkattai-2025-08-27-15-07-42.jpeg)
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோயிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுா்த்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விநாயகர் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று காலை மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கஜபூஜையுடன் தொடங்கியது. தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் உச்சியில் அமர்ந்திருக்கும் உச்சிப்பிள்ளையார் மூலவர், மாணிக்க விநாயகர் மூலவர் சந்நிதிகளில், முறையே 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
இதற்காக கோயில் மடப்பள்ளியில் 150 கிலோ கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் அர்ச்சகர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இந்தக் கொழுக்கட்டையை 24 மணி நேரம் நீராவியில் வேக வைத்து தயாரிப்பது வழக்கம். இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர், அர்ச்சகர்கள் மடப்பள்ளியில் இருந்து 150 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையின் பாதியை (75 கிலோ) உச்சிப் பிள்ளையாருக்கு கொண்டு சென்றனர். அங்கு விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பின்னர் பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், மற்றொரு 75 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து விநாயகரை வழிபட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இன்று இரவு பால கணபதி அலங்காரத்தில் விநாயகப் பெருமான் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் தினமும் மாலை மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
நிறைவு நாளான செப்டம்பர் 9 ஆம் தேதி மூலவர் விநாயகர், உற்சவர் விநாயகருக்கு பால் மற்றும் பல வகை பழசாறுகள், விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி என்பது பகவான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் மகனாகப் பார்க்கப்பட்ட விநாயகரின் பிறந்தநாளாகும். புராணங்களின்படி, பார்வதி அம்மன் தன் உடல்ல இருந்து விநாயகரை உருவாக்கி, குளிக்கும்போது காவல் காக்கச் சொன்னார். சிவபெருமான் வந்தபோது, விநாயகர் அனுமதிக்கல, கோபத்துல சிவன் அவரோட தலையை வெட்டினார். பிறகு குற்ற உணர்வோட யானை தலையை இணைச்சு உயிர் கொடுத்தார். இதனால, விநாயகர் யானை முகமுள்ளவரா, தடைகளை நீக்குபவரா வழிபடப்படுறார்.
இந்த விழா, புதிய வேலைகள், திருமணங்கள், படிப்புக்கு முன் விநாயகரை வழிபட்டு வர நினைத்ததை நடக்கும் என்பது ஐதீகம். கடந்த 2004-ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.