திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 28 நாட்கள் மேற்கொள்ளப்படும் பச்சைப்பட்டினி விரதம் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை நடைபெறும். இந்த 28 நாட்களும் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர் மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், நடைபயணமாக இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். மேலும், பக்தர்கள் கொண்டு வரும் பூக்களைக் கொண்டு பூச்சொரிதல் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் இன்று தொடங்கியது.
அதன்படி, கோயிலில் இருந்து அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையர் அ.இரா. பிரகாஷ் , அறங்காவலர்கள் பி. பிச்சை மணி, ராஜ சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் திரளான பக்தர்கள் பூதட்டுகளுடன் வருகை தந்தனர். யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.