தமிழகம் முழுவதும் (Vigilance awareness week) நேற்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருச்சி மாநகரில் பொதுமக்கள், மாணவ மாணவியர்களிடம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கருமண்டபம், திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை, காவல்துறை தலைவர் லலிதா லெட்சுமி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஆகியோர் கலந்து கொண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
மேற்கண்ட விழிப்புணர்வு ஊர்வலமானது பள்ளி நுழைவு வாயிலில் தொடங்கி, தீரன்நகர் பேருந்து நிறுத்தம், கோரையாறு மேம்பாலம், சோதனை சாவடி எண்:1 வரை சென்றடைந்து திரும்பி கோரையாறு மேம்பாலம், தீரன்நகர் பேருந்து நிறுத்தம் வழியாக வந்து மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்து நிறைவு பெற்றது.
மேற்கண்ட ஊர்வலத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், எஸ்.ஆர்.வி பள்ளி சார்பாக ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் உட்பட 300 நபர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“