scorecardresearch

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் தெப்பக்குளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Trichy
Trichy srirangam ranganathaswamy temple Masi teppam festival

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தினமும் உற்சவர் ஶ்ரீநம்பெருமாளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகளும், மண்டகப்படிகளும், பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா காட்சிகளும் நடந்து வருகின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் ஶ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இரவு சிறப்பு அலங்காரத்துடன் ஶ்ரீநம்பெருமாள்-தாயார் சமேதமாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியபின் தெப்ப உற்சவம் தொடங்கியது. மூன்று முறை தெப்பம் வலம் வந்தது.

மூன்றாவது சுற்றின்போது பெருமாள் தாயார் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார், அங்கு அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டபின், மீண்டும் ஶ்ரீநம்பெருமாள்- தாயார் சமேதமாக தெப்பத்தில் ஏறி சுற்றை நிறைவு செய்தபின் கரை ஏறினார், அதைத்தொடர்ந்து உபயக்காரர்கள் மரியாதைக்குப்பின் மேற்கு மற்றும் வடக்குவாசல் வழியாக இரவு 11.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இன்று (3-ம் தேதி) மாலை மீண்டும் ஶ்ரீநம்பெருமாள் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வருவார். அதனைத் தொடர்ந்து இரவு ஒற்றைபிரபை வாகனத்தில் பந்தக்காட்சியுடன் ஶ்ரீநம்பெருமாள் கோவில் திரும்புவார். அத்துடன் தெப்பபோற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

ஸ்ரீரங்கம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் தெப்பக்குளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Trichy srirangam ranganathaswamy temple masi teppam festival

Best of Express