ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாரியம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 3-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின்னர், மண்ணச்ச நல்லூர் நொச்சியம் வழியாக வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றை வந்தடைந்தார். அங்கு அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார்.
/indian-express-tamil/media/post_attachments/b704e416-c03.jpg)
அப்போது, அம்மனின் அண்ணன் முறையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மாரியம்மனுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக கருட மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து வாண வேடிக்கையுடன், மேள தாளங்கள் முழங்க கோயில் இணை ஆணையர் மாரியப்பன் உள்ளிட்டோர் சீர்வரிசைப்பொருட்களை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு வடகாவிரியை வந்தடைந்தனர்.
அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் கோயில் இணைஆணையர் பிரகாஷிடம் முறைப்படி வழங்கினர். பின்னர், பட்டு வஸ்திரங்கள், வளையல், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு வடகாவிரியில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டார். வழிநெடுக மண்டகப்படி மரியாதைகளை பெற்றபடி இரவு 11 மணிக்கு சமயபுரம் கோயிலை வந்தடைந்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.