108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 6-ம் நாள் நிகழ்வு இன்று (05.01.2025) காலை நடைபெற்றது.
இதில், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக, நம்பெருமாள் - வெண்பட்டு உடுத்தி முத்து - ஆண்டாள் கொண்டை அணிந்து காட்சியளித்தார்.
நம்பெருமாள் நெற்றி சுட்டிப்பூ சாற்றி, கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம்; திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் சந்திர ஹாரம், அதனுள் ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்துச்சரம், தங்க பூண் பவழ மாலை அணிந்திருந்தார்.
பின்புறம் - புஜ கீர்த்தி; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார்.
இன்று வார விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கநாதரை ’கோவிந்தா, கோவிந்தா’, ’ரங்கா ரங்கா’ கோஷம் முழங்க வழிபட்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“