திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் குழுமாயி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அந்த வகையில், இந்த ஆண்டு குழுமாயி அம்மன் கோயில் குட்டிகுடி திருவிழா மாசி மாதம் 7- ஆம் தேதி 19.2.2025 புதன் கிழமை இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாசி மாதம் 19 தேதி 03.03.2025 அன்று திங்கட்கிழமை மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 04.03.2025 செவ்வாய் கிழமை அன்று மாலை உறையூர் மேட்டுத் தெருவில் இருந்து யானை மீது பூக்கள், மாலை வாசனைத் திரவியங்கள் குழுமாயி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
குழுமாயி அம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து மாலையுடன் கல்லாங்காடு வழியாக வண்ணாரப்பேட்டை வந்தடைந்தது. பின்பு தேரில் வைத்து அலங்கரித்த குழுமாயி அம்மன் புத்தூர் நால்ரோடு வந்ததும் எல்லைக் கல்லில் இருந்து மருளாளி சிவக்குமார், கொடிமணி ஆகியோர் குமரன் நகர் சீனிவாசன் நகர் வழியாக எல்லைகள் வந்தடைந்தது.
குழுமாயி அம்மனும் வேறு வேறு திசைகளில் இருந்து வந்து புத்தூர் சிந்தாமணியில் ஒன்றுடன் ஒன்று சந்தித்து பின்பு உறையூர் மேல கல் நாயக்கர் தெருவில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீ பந்தங்களுடன் அலங்கரித்து தேரில் வரும் அம்மனை வரவேற்றார்கள். மருளாளியை இரு இளைஞர்கள் தனது தோள்களில் சுமந்து வந்தனர்.
நேற்று முந்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று காலை முதல் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி சிவக்குமார் வந்ததும் ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டது. மருளாளி அவற்றின் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தது பரவசத்தை ஏற்படுத்தியது.
முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை குடித்தார். குட்டி குடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
புத்தூர் பகுதி முழுவதும் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து தத்தம் வீடுகளில் கறி விருந்து கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கத்தினர் சார்பில் புத்தூர் உறையூர் பகுதிகளில் வழி நெடுங்கிலும் அன்னதானங்கள் போடப்பட்டு வருகிறது.
முன்னதாக நாளை 07.03.2025 வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நீராட்டு விழாவும், சனிக்கிழமை குடிபுகுதல் விழாவும் நடைபெறும். திருவிழா இத்துடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்